ரயில் நிலைய உணவகங்களில் சோதனை பூஞ்சை பிடித்த காய்கறிகள் பறிமுதல்
ரயில் நிலைய உணவகங்களில் சோதனை பூஞ்சை பிடித்த காய்கறிகள் பறிமுதல்
ADDED : ஆக 20, 2026 11:55 PM

பெங்களூரு: மாநிலத்தின் 36 ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், கேன்டீன்களில் உணவு பாதுகாப்பு துறையினரின் சோதனை நடத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் ஹோட்டல்கள், விடுதிகள், பி.ஜி.,க்கள், அங்கன்வாடி மையங்கள், பப், பார்கள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்கள் என பல இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறிய ஹோட்டல்கள், உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு கே.எஸ்.ஆர்., யஷ்வந்த்பூர், கே.ஆர்.,புரம், எலஹங்கா, கோலார், மைசூரு, ஹாவேரி, உடுப்பி, கொப்பால், கதக், தாவணகெரே, பாகல்கோட், கார்வார், யாத்கிர், கடூர் சந்திப்பு, பல்லாரி, ஹொஸ்பேட், ஹூப்பள்ளி, மங்களூரு உட்பட 36 ரயில் நிலையங்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக, எப்.டி.ஏ., எனும் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில் நிலையங்களில் உள்ள சிற்றுண்டிகள், உணவகங்கள், உணவு வழங்கும் பெட்டிகள் உட்பட 112 உணவு நிறுவனங்களில் உணவின் தரம், சுகாதாரம், குறியீடுகள், சேமிப்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. பல உணவகங்கள் விதிகளை மீறியது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு கே.ஆர்.,புரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகம், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது.
சமோசாக்கள் அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. தயாரான வடைகள் தினசரி நாளிதழ்களின் மீது இருந்தது. பல உணவுகளில் லேபிள்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தன.
உணவகங்களுக்கான அனுமதி பெற்ற சான்றிதழ்களை, கண்களுக்கு தென்படும் வகையில் வைக்கவில்லை.
மைசூரு ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் தாள்கள் அல்லது பொருட்களை பயன்படுத்தி இட்லி தயாரிக்கப்பட்டு வந்தது. இங்குள்ள உணவகத்தின் சமையல் அறையில், காலாவதியான உணவு பொருட்கள், பூஞ்சை பிடித்த வெங்காயம், காய்கறிகள், உணவு சேமிப்புக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் வாளிகளில், சட்னி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹாவேரி ரயில் நிலையத்தில், காலாவதியான நந்தினி தயிர், பால் பாக்கெட்டுகள், ஜிலேபியில் மஞ்சள் நிறமும், பேடாவில் இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.
ஆய்வு குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விதிகள் மீறி நுகர்வோரின் உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு தொழிற்சாலைகள், அவற்றின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளையில், மங்களூரு - கேரளா மற்றும் ஹூப்பள்ளி - பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் துாய்மையும், சுகாதாரமும் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
