6 வயது சிறுமி கொலையில் பரிசோதனை அறிக்கை 'ரிலீஸ்'
6 வயது சிறுமி கொலையில் பரிசோதனை அறிக்கை 'ரிலீஸ்'
ADDED : ஜூன் 17, 2026 01:52 AM

காடுகோடி: பெங்களூரில், 6 வயது சிறுமி கொலை வழக்கில், வயிற்றில் பலமாக தாக்கியதால் காது, மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து இறந்த அதிர்ச்சி தகவல், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
பெங்களூரின் காடுகோடி சீகேஹள்ளியில் வசிப்பவர் பிரவீன். இவரது மனைவி பிரியங்கா. தம்பதியின் மகள் வெண்ணிலா, 6. கணவரை பிரிந்த பிரியங்கா, கள்ளக்காதலன் மோகனுடன் வசித்தார். கடந்த மார்ச் 24ம் தேதி வெண்ணிலா திடீரென இறந்தார். உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறி, உடல் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், வெண்ணிலா சாவில் சந்தேகம் இருப்பதாக, பிரவீன் அளித்த புகாரில் காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்ற அனுமதியுடன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் வெண்ணிலா கொலை செய்யப்பட்டது தெரிந்தது. பிரியங்கா, மோகன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசார் கையில் கிடைத்து உள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுதாவது:
வெண்ணிலாவின் வயிற்றில் பலமாக தாக்கியதால், வயிற்றில் 400 மி.லி., ரத்த உறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் தவித்து உள்ளார். மேற்கொண்டு அவரை தாக்கியதால் காது, மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் காவலில் இருக்கும் பிரியங்கா, வெண்ணிலா இறந்ததில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறார். அவரது வாயில் இருந்து உண்மையை வரவழைக்க, 'பாலிகிராப்' அல்லது 'பிரைன் மேப்பிங்' சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு, நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோர உள்ளனர்.
