ADDED : ஏப் 07, 2025 04:54 AM
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும், தாலுகாவில் உள்ள ஒவ்வொரு துறையும் சட்டப்பிதா ஜெயந்தி விழாவுல தலா ஒரு தேர் கொண்டு வரவேண்டும். நகர்வல பவனியில் இடம் பெற செய்ய வேணும்னு வட்டாட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செஞ்சாங்க.
இதில், காக்கி துறையின் தேர் ஒன்றும் இடம் பெற வேண்டும் என்று யூத் ஒருத்தரு, அழுத்தம் கொடுத்தாரு. இதுக்கு எந்த பதிலையும் காணோம். உள்ளூரில் வட்டாட்சியர் ஏற்பாட்டில் நடத்துகிற சட்ட பிதாவுக்கான முதல் தேர் உலா இது. இதில் சட்ட சலுகையில் அதிகாரத்துக்கு வந்த எத்தனை ஆபீசர்கள் பங்கேற்க போறாங்க என்பதை அவரது விசுவாசிகள் கணக்கு எடுக்க போறாங்களாம்.
கீதா சாலையில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த, அரசுக்கு சொந்தமான ஏழுமலையான் சுவாமி கோவிலில், வடக்கு வாசல் பகுதியில் 5 'சி'யில் பிரமாண்டமான முறையில் ராஜகோபுரம் கட்டப் போறாங்க. இதற்கு, பூமி பூஜையும் நடத்தினாங்க.
அரசு நிதியில் உருவாகிற ராஜ கோபுரம், வருடாந்திர உற்சவம் நடக்கும் முன்பாகவே, விதிமுறைப்படி கட்டுமான பணிகளுக்கு 'டெண்டர்' விடாமல் நுழைவாயில் கட்டடத்தை இடித்து தள்ளி தரைமட்டம் ஆக்கினாங்க. அரசு நிதியை தன்னிச்சையாக செலவிடும் 'அதிகாரம்' தனி நபருக்கு உண்டா.
ஒரு லட்சம் ரூபாய் வேலையாக இருந்தாலும் அதை ஓப்பன் டெண்டர் விட வேண்டும் என்று சட்டம் இருக்குதே. '5 சி'க்கான அரசு வேலையை செய்ய டெண்டர் விடாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்யலாமா என்று கேள்விகள் பறக்குது.
இனியாவது டெண்டர் அறிவிப்பு வருமா. எத்தனை பேர் போட்டி போட போறாங்க. எப்போ தான் வேலைகளை துவக்க போறாங்க. இதனை முடிக்க கால அவகாசம் எவ்வளவு நாளோ?
பெரிய பெரிய தொழிற்சாலைகள் கூட லாப வருமானம் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி மூடப்பட்டு வரும் காலத்தில், ஆண்டுதோறும் பல கோடியை வருமானமாக கொட்டுகிற கோடி லிங்க கோவிலை அரசுடைமை ஆக்காமல் போனது ஏனோ.
தனியார் வசம் உள்ள இக்கோவில், பக்தர்களுக்கு தான் புண்ணிய தலம். ஆனால், இதன் வருமான சொத்துக்கு அதிபதி நீயா நானா போட்டிக்கு பந்தய திடலாக இருக்குது. இதன் விவாதம் உச்சநீதி மன்றம் வரை நடக்குது. இன்னும் தகராறு ஓயல. அறநிலையத் துறை, சுற்றுலாத்துறை ரெண்டுமே இதில் கவனம் செலுத்த மறக்கலாமா. இதன் வருமான கணக்கை வெளிப்படையாக சொல்லக் கூடாதா?
ஊழல் தடுப்பு படை அதிகாரி முல்பாகல் முனிசி.,க்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தாரு. அப்போது, அங்கே சகல வசதியுள்ள பெரிய ஆபீசர் அறையில் நாற்காலியில் ஆளை காணோம். எங்கே போனாரு. அவர் வசித்து வரும் வீடு தான் எங்கே இருக்கு. தினமும் வருவாரா.
எப்போ தான் வருவாரு. சிந்தாமணிக்காரர் தினமும் 60 கி.மீ., அப் அண்ட் டவுண் டிராவல் செய்றாரா. இந்த நகரத்தோட திடீர் சம்பவங்களை கவனிக்க யார் பொறுப்பு. இப்போ லீவு போட்டுட்டு மீன் சாப்பிட மங்களூருக்கு சென்றிருக்கிறாரா. இதுக்கு தான் அரசு அதிகாரம் கொடுத்திருக்கா. இங்கு ஊழியர்களிடம் கேள்விகளை கேட்க வேண்டிய ஆபீசரே இல்லை. மற்றவர்களுக்கு மஜா தானேன்னு சொல்லி இருக்காரு.
முல்பாகல் மட்டுமில்ல, கோல்டு சிட்டியிலும் கூட டிராவல் செய்றவங்க தான் பெரிய பெரிய பதவியில் இருக்காங்க. இவங்களுக்கு டோஸ் கொடுக்க ஆளில்லையே. ஜனங்களும் நமக்கென போச்சு என்றுதானே கண்ணை, வாயை மூடிக்கிட்டிருக்காங்க.

