ADDED : ஏப் 10, 2025 05:01 AM

* ஆபத்தான நிலத்தடி நீர்!
கோல்டு சிட்டியில் நிலத்தடி நீரில் புளோரைடு, நைட்ரைடு அதிகமாக இருப்பதாக ஆய்வு செய்தவங்க ரிப்போர்ட் அளிச்சாங்க. ஆனா இப்போ, பல லட்சம் ரூபாய் செலவுல பகுதி தோறும் அதே நிலத்தடி நீருக்காக போர்வெல் அமைச்சுட்டு வர்றாங்க. அதத்தான் குடிக்கணுமாம். இதனால இல்லாத நோயெல்லாம் வந்து சேருமேன்னு விபரம் அறிந்த வட்டாரம் யோசிக்குது.
கோல்டு சிட்டியில் பல இடங்கள்ல பாலாத்து ஊத்து கிடைக்கும்போது அத மேலெடுத்து சுத்திகரிப்பு செய்து, பகுதி தோறும் சப்ளை செய்யலாமே. காவிரி பிறக்கும் மாநிலத்திலேயே குடிநீருக்கு நிரந்தர தீர்வு இல்லாம தவிக்கணுமா?
கோல்டு சிட்டியில் பஞ்சமில்லாமல் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு யார் ரூபத்தில் வருண பகவான் பிறக்க போறாரோ?
------
* பில் பாஸ் ஆனதா?
எம்.ஜி.மார்க்கெட் இறைச்சி கடைகள் உள்ள இடத்தில் சாலையை கொஞ்சம் கவனிக்க மாட்டாங்களா? சாக்கடை கழிவுகள் நிற்காமல் பாய்ந்து ஓட வடிகால் அமைத்திருக்காங்க. அது சாலையை விட மிக உயரமாக தடுப்பாக அமைந்திருப்பதால், சாலை நீர் கழிவுநீர் எல்லாம் கால்வாய்க்குள் செல்ல வழியில்லாமல் பள்ளங்களில் தேங்குது. இதுக்கு யார் தான் பொறுப்பான பொறியாளரோ?
இங்கு கொசுக்கள் உற்பத்தியாகிற தொழிற் சாலையாக மாறுது. துர்நாற்றம் பலவித நோய்களுக்கு காரணமாக உள்ளது. சுகாதார துறையினர் மட்டுமல்ல திடீர் விசிட் செய்கிற வி.ஐ.பி.,க்கள் கூட வந்து பார்க்கணுமே. இதுக்கெல்லாம் பில் பாசாகி விட்டதா, நாசமாகி விட்டதா என்ற சந்தேகம் தான் வியாபாரிகள் மத்தியில் உள்ளதாம்.
------
* இது என்ன நியாயமோ?
பிரதான பி.எம்.சாலை அகலப்படுத்தும் வேலை முடிந்து விட்டதா? அப்படியானால் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கட்டடங்கள் ஆக்கிரமிப்பு இல்லையா? அதேபோல, மகாராஜா சாலையின் குறுக்கு முதல் ரா.பேட்டை சதுக்கம் வரை ஆக்கிரமிப்பே இல்லையா?
நடைபாதைகளுக்கும் இடம் விடாமல், பெரும் பணக்காரர்கள் கட்டியது எல்லாம் ஓ.கே.,வா? இதெல்லாம் நேர்மையான அளவில் தான் கட்டப்பட்டதென முடிவு செய்துட்டாங்களா? ஆக்ரமிப்புகளை இடிக்காமல் விட்டுத் தர எத்தனை 'சி' யார், யார் வீட்டுக்கு சென்றது என்பதை காலம் பதில் சொல்லும் என்கிறாங்க.
-------
* ஏன் கவனக் குறைவு?
மலிவு விலை உணவகம் அமைக்க கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. இதை பரபரப்பாக பேசினாங்க. 90 சதவீத வேலைகள் முடிந்து 100 நாட்கள் கடந்தும் இன்னும் இதன் காம்பவுண்ட் வேலை நடக்கல.
சில சில்லறை வேலைகளும் நடக்க வேணுமாம். ஆனாலும் இந்த மலிவு விலை உணவகம் எப்போ திறப்பாங்க. இதன் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கப் போறாங்களோ?
பக்கத்து தொகுதியான ப.பேட்டைக்கும் ஆளும் கட்சிக்காரர் தான் அசெம்பிளிக்காரர். ஆனால், அதே கட்சியின் அசெம்பிளிக்காரரான கோல்டு சிட்டியில் மட்டும் ஏன் மலிவு விலை உணவகம் திறக்கப்படல.
அதிலும் உணவுத் துறை மந்திரியாக இருப்பவர் கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரரின், 'நைனா' தான்னு மாநிலமே அறியும். ஆனால், இந்த உணவகம் ஏற்படுத்த யார் தான் தடையாக இருக்காங்களோ?
மருத்துவமனை, மினி விதான்சவுதா, தாலுகா ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஏபிஎம்சி என கட்டடங்களின் ஸ்பெஷிலிஸ்ட்டாக உள்ள கோல்டு அசெம்பிளிக்காரருக்கு ஏழைகள் நேரடியாக உதவி பெறும் உணவகம் மீது மட்டும் ஏன் கவனக் குறைவோ?
***

