ADDED : ஏப் 15, 2025 04:57 AM
பகவத் கீதையின் நினைவாகவே ரா.பேட்டையில் கீதா சாலை உருவானது. இங்குள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கு பல உற்சவ கமிட்டிகள் முன் வந்தாங்க. ஆனால் தனிப்பட்ட ஒரு கமிட்டி மட்டுமே செய்ய கூடாதென கூறப்பட்டது. அறநிலையத் துறையே பணிகளை செய்ய போறதாகவும் அறிவிச்சாங்க.
திட்ட அறிக்கை, நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல், எல்லாம், 'ஓகே' ஆனது. கட்டுமான பணிக்கு இவ்வாண்டு துவக்கத்தில் பூமி பூஜை நடத்தியாச்சு. நுழைவு வாயிலை அகற்றியாச்சு. அதற்கான தொகையும் ஒதுக்குவதாக அறிவிச்சாங்க. இன்னும் கூட கட்டுமான பணிக்கு டெண்டர் விடல. உள்ளூர்காரங்களுக்கு முன்னுரிமை தரனும்னு கோரிக்கை எழுந்திருக்கு. ஆனாலும், வெளியூர் காரர்தான் ஆர்டரை தட்டிப் பறிப்பாருன்னு விபரம் தெரிந்தவங்க சொல்றாங்க. ஏற்கனவே, பர்சன்டேஜ் பேசி முடித்து, அட்வான்ஸ் புக்கிங் ஆகிடுச்சாமே.
சட்டப் பிதா கால் பதித்த இடத்தில் எல்லாம் நினைவு மண்டபம் கட்டுவதற்காக, தேவையான நிதியை முந்தைய பொம்மை அரசு வழங்கி அறிவிப்பு வெளியிட்டாங்க.
அதுல ஒரு இடம் கோல்டன் சிட்டி. சமூக நலத்துறை இதுக்காக ஒரு இடம் ஒதுக்கினாங்க. அதை தொழிற் மேம்பாட்டுத் துறைக்காரங்க பறிச்சிட்டாங்க. பெயர் பலகையை அகற்றிட்டாங்க.
சிலிக்கான் சிட்டியின் கப்பன் பூங்கா போல, சட்டப் பிதா பெயரில் பசுமையான பூங்கா ஒன்றை பெமல் கம்பெனிக்காரங்க அமைச்சாங்க; அதனையும் அப்புறப்படுத்துறாங்க. பெமல் பேக்டரி பகுதியில் பவன் ஒன்று கட்ட அடிக்கல் நாட்டியதோடு மறந்துட்டாங்க.
ரா.பேட்டை பூங்காவில் பவன் கட்டினாங்க. சட்ட விதிப்படி எந்த ஒரு கட்டடமும் இருக்க கூடாதென வழக்கு போட்டாங்க. அப்படின்னா, பூங்காவில் உள்ள சட்டப்பிதா சிலை, முன்னாள் எம்.எல்.ஏ., சிலை, அவரோட சமாதிக்கும் வேட்டு வெச்சாங்க. இந்த வழக்கு இன்னும் முடியல.
'நான் சிரிக்கிறேன்... சிரிக்கிறேன்... சிரிப்பு வரல! நான் அழுகுறேன்... அழுகிறேன்... அழுகை வரல' என்ற பாட்டு தான் கோல்டு சிட்டிக்கு பொருத்தமா இருக்குதென சட்டப் பிதா விசுவாசிகள் மனசாட்சி சொல்லுது.
சட்ட மேதை ஜெயந்திக்காக, வார்டுக்கு ஒரு தேரு என 35 தேரு தயார் செஞ்சாங்க. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, காக்கிகளின் பவரை 'யூஸ்' செய்து, தேர் பவனியை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினாங்க, அதிகாரத்தில் உள்ளவங்க.
ஆனாலும், தேர் இல்லாமல், படத்தை மட்டுமே எடுத்து வந்து, ஊர்வலம் நடத்தினாங்க. துறைகளின் ஆபீசர்கள் நடத்திய தேர்பவனியில், அரசு ஊழியர்கள் 5 சதவீதம் கூட வரலைன்னு தெரியுது.
டிராக்டர் தேருக்கு தலா 10-, 20 பேருடன் வந்தாங்க. இந்த விழாவுக்கு பல லட்சம் கணக்கு காட்டுவாங்கன்னு சமூக ஆர்வலர்கள் அங்கலாய்க்கின்றனர்.
தேசிய பிரசித்தி பெற்ற ஜிம்கானா என்ற பெயரில் இருந்த விளையாட்டு மைதானத்தை ஸ்டேடியம் ஆக்க தொழிலாளர்களிடம் நன்கொடை வசூல் செஞ்சாங்க. இதுக்காகவே இரு முறை தேசிய கால்பந்து போட்டி நடத்தி கலெக் ஷன் செஞ்சாங்க. ஆனா எதுவும் நடக்கலை.
வன விலங்குகள் வாழும் முட்புதர் காடாக கிடக்குது. மனிதர்கள் நுழையாதபடி, பூட்டுகள் தொங்குது. விஷ ஜந்துக்கள் மட்டுமே விளையாடி வருகின்றன.