ADDED : ஏப் 15, 2025 08:40 PM
பேனர் படங்கள் எங்கே?
முனிசி., அலுவலகம் நுழைவு வாயிலில் ஒவ்வொரு விழாக்களின் போதும் பேனர்கள் வைப்பாங்க. அதில் முனிசி., மக்கள் பிரதிநிதிகள் அனைவரின் படங்களும் இடம் பெறும்.
இம்முறை 14ம் தேதி நடந்த விழாவுல மக்கள் பிரதிநிதிகள் படங்கள் இல்லாமல் பேனர் வைத்திருக்காங்க. முனிசி., உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிஞ்சு போச்சா அல்லது முனிசி.,யின் முக்கிய புள்ளி ஒருத்தரு, கிரிமினல் வழக்கில் சிக்கியிருப்பதால், அவரோட படத்தையும் சேர்த்து தானே இடம் பெற செய்யணும்.
அதனால், மிஸ்டர் கிளீன்கள் என சொல்லிக்கிறவங்க பல கேள்விகளுடன் விமர்சனங்களை எழுப்புவாங்க. அதுக்கு எதுக்கு இடம் தரணுமுன்னு, 'அவாய்ட்' செய்துட்டாங்களா?
ஏ.பி., மாநில காக்கிகளின் வசம் விசாரணையில் இருக்கும் அந்த நபரை மீட்டெடுக்க, சட்டத்தின் உதவியை நாடுறாங்க. அவரு தப்பு செய்ற மனுஷனே இல்லேன்னு சொல்றாங்க. யாரோ போட்டுக் கொடுத்து சிக்க வெச்சிருக்காங்க. அதிலும் கூட உள்குத்து தான் காரணம் என்று சொல்றாங்க; நெஜமா இருக்குமா?
கணக்கு காட்டுவாங்களா?
ஒவ்வொரு கிராம பஞ்.,க்கும் தலா ஒரு, 'எல்' குறையாமல் வட்டாட்சி நிர்வாகம் பட்டுவாடா செஞ்சிருக்காங்க. ஒரு தேருக்கு, '10 -கே' வாங்கி இருக்காங்க. அதனால, ஆடிப்பாடி தேர் கொண்டு வந்தாங்க. வந்தவங்க எல்லாம் கிராம ஜனங்களே தவிர, அரசு ஊழியர்கள் ஒருத்தரும் வரவில்லை.
ஆனால், சிட்டியில் உள்ள 35 வார்டில் ஒவ்வொரு வார்டுக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா கொடுத்தாங்கன்னு பார்த்தால் ஒண்ணுமே தரல்லையேன்னு அழுத்தமா சொல்றாங்க.
கிராம பஞ்.,க்கு இருக்கிற மரியாதை மதிப்பும், முனிசி.,க்கு உட்பட்ட 35 வார்டுகளுக்கு கிடைக்கல என்கிறாங்க. சிட்டிக்கார கவுன்சிலர்களை கொஞ்சமாவது கவனிக்க கூடாதா. முனிசி.,யில் இந்த விழாவுக்கு எவ்வளவு கணக்கு காட்ட போறாங்களோ; இதை யார் கேட்பது?
வரலாற்றை மறைக்கலாமா?
ரா.பேட்டை பூங்காவை, அனைத்து கட்சிக்காரங்களும் பாராட்டுற வகையில் மாற்றப் போவதாக அசெம்பிளிக்காரரு தெரிவித்தாரு. இந்த கருத்துக்கு ஜனங்க, 'ஓ' போடுறாங்க. இதுபோல, பல, 'சி' செலவழித்து உருவாக்கிய 30க்கும் மேற்பட்ட பூங்காக்களையும் கவனிக்கலாமே. ஒவ்வொரு பூங்காவுக்கும், அப்பகுதிகளில் சமுதாய தலைவர்களின் பெயர்களை சூட்டி பராமரிக்கலாமே.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இன்னும் இங்கிலீஷ் காரங்களோட பெயர்களில் தான் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், குறுக்கு சாலைகள் இருக்குதே.
சும்மா பெயருக்கு முனிசி.,யில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுக்கிற உறுப்பினர்களை, 'கூல்' செய்றாங்களே தவிர, ஒரு தீர்மானமும் அமலுக்கு வந்தபாடில்லையே.
முனிசி.,யில் தலைவர்களாக இருந்தவங்க படங்கள் எல்லாமே, குப்பை கிடங்குக்கு போயிருக்கு. எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை யார் தலைவராக இருந்தாங்க என்ற பெயர் பட்டியல் பலகையும் காணவில்லை. இதையாவது கண்டுபிடிப்பாங்களா?
எப்போ தான் முடியும்?
கோல்டு சிட்டியில் இருந்து ஏ.பி., மாநிலம் குப்பம் வரையிலான 26 கி.மீ., துார ரயில் இணைப்புக்கு ம.அரசு பல கோடிகளை வழங்கினாங்களே தவிர, அந்த நாள் முதல் இந்த நாள் வரை வேலைகள் முடிந்தபாடில்லை.
இன்னும் எத்தனை கோடி தேவைப்படுது என்பதையாவது திட்ட ஆபீசர்கள் அரசுக்கு சொல்ல வேணாமா. 28 ஆண்டா செங்கோட்டைக்கு வென்றவர், இதை முடித்து இருக்கலாமே. அவருக்கு பின், தேர்வானவங்களும் இந்த திட்டத்தை கவனிக்கலையே.
எப்போ பார்த்தாலும் இணைப்பு பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது; இன்னும் 20 சதவீத பணிகள் தான் நிலுவையில் இருப்பதாக சொல்றாங்களே தவிர, முடிந்த பாடில்லையே.

