கோல்டு சிட்டி மக்கள், தினமும் அதிகமாக நடமாடும் இடம் ரா.பேட்டை தேசப் பிதா மார்க்கெட். இங்குள்ள சாலைகளை சீர்படுத்தாமல் எதுக்காக விட்டு வெச்சிருக்காங்களோ?
பத்து வருஷத்துக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் சாலைகள் எல்லாமே சிதைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியிருக்கு.
மீன் கடை, இறைச்சிக் கடை சவப் பெட்டி தயார் செய்கிற புல்லு சந்தை சாலை என மோசமான சாலைகளின் பட்டியல் தான் நீளமாக இருக்குது. 100 கோடி ரூபாயில் புதுசா மார்க்கெட் ஏற்படுத்த போவதாக முனிசி.,யில் திட்டம் எல்லாம் போட்டாங்க. அது என்னவானது.
இந்த திட்டத்துக்கு நிதி நிறுவனங்கள் கடனுதவி வழங்கவில்லையா. கடன் பெற அரசும் அனுமதி தரலையா. பின்னடைவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை. ஐந்து விளக்கு பகுதியில் 'ஐ லவ் கே.ஜி.எப்.,' என்கிறவங்க, இதுக்காகவே, சாதனை பட்டமும் வாங்குவாங்க. கொஞ்சமாச்சும் தேசப் பிதா மார்க்கெட்டை சீரமைக்க 'லவ் செய்ய' மாட்டாங்களா.
தொழில் பூங்காவும், தொழில் நகரமும் அமைக்க போவதாக அசெம்பிளி மேடம் மட்டுமே சொல்லி வருவதை கேட்டு, கேட்டு நகரமே பூரிப்பில் இருக்குது.
இவர் போலவே, ப. பேட்டை அசெம்பிளிக்காரரும், 700 ஏக்கரில் தொழிற் பூங்காவும், 300 ஏக்கரில் தொழில் நகரமும் அமைக்க போவதாக சொல்ல தொடங்கிட்டாரு. கோல்டு சிட்டி, ப.பேட்டை ஆகிய ரெண்டு தொகுதிகளில் எத்தனை தொழிற்சாலைகள், எத்தனை தொழில் நகரங்கள் என இருவருமே பிரித்து சொல்லலாமே.
எப்படியோ 'குடா' வை பிரித்து 'புடா' வும் ஏற்படுத்த இரு தொகுதிக்காரங்களும் ஒப்புக் கொண்டதாக சொல்றாங்க. அரசு மட்டத்திலும் பரிசீலனையில் இருக்குதாம். எனவே 'குடா' வின் கீழ் எத்தனை தொழிற்சாலைகள் வரப்போகுதென, கோல்டு சிட்டியில் குழப்பம் 'ஸ்டார்ட்' ஆகியிருக்கு.
தேசத்தின் முதல் சட்ட அமைச்சர், கோல்டு சிட்டியில் காலடி வைத்த இடமாக இருப்பதால் சமூக நலத்துறை மூலம் ஐந்து ஏக்கரில், 5 கோடி ரூபாயில் பவன் கட்டுவதாக, அப்போதைய பூ ஆட்சி அரசு அறிவித்தது.
சமூக நலத்துறையும் அடையாளம் காட்டியது. அந்த இடத்தை வழங்க விடாமல் தடுத்து தொழில் வளர்ச்சித் துறை பறிச்சாங்க. அப்படியானால், அந்த பவன் எங்கே கட்டப் போறாங்க. இதன் பேரில் 'நோ இன்ட்ரஸ்ட்' என்கிறாங்க, அப்படியா?
மூத்த மந்திரியான 'மாஜி' கோலாருக்காரர், தனது ஜாதி பெயரை சொல்லி, சி.எம்., பதவி மீது ஆசைப்பட தொடங்கிட்டாரு. டில்லியில் உள்ள சில பெருந்தலைகளே, சி.எம். நாற்காலியை கேட்கும்படி துாண்டி விட்டு இருக்காங்களாம்.
இதுநாள் வரைக்கும் டி.சி.எம்., இருக்கைக்காரருக்கு ஒத்து ஊதி வந்தவரு, சளைத்துப் போயிட்டாராம். தனக்கு ஹை கமாண்ட் ஆதரவு 'ஸ்ட்ராங்'காக இருப்பதை வெளிப்படுத்துறாரு. கனவு போட்டியில், இவரும் சேர்ந்திருக்கிறார். இதுக்காக நிறைய பயிற்சியும் பெற்று உள்ளாராம்.
இவருக்கு அந்த 'நாற்காலி' கிடைக்க எதிர்க்கட்சிகளிலும் பேரம் நடந்து வருதாம். உள் ஒப்பந்தம் செய்து கொள்வதில் இவருக்கு நிகர் இவரே தானாம்.