ADDED : அக் 08, 2025 07:18 AM
கும்பகர்ண துாக்கம்!
சி ல கட்சித் தலைவர்களை, தொண்டர்கள் தலையில் துாக்கி வைத்து ஆடும் பழைய கலாச்சாரம், கோல்டு சிட்டியில் இன்னும் மறையல. அத்தியாவசிய தேவைகளைப் பற்றி கூட கவனிக்க தவறுகிற உள்ளூர் தலைவர்கள் போக்கும் மாறல. இப்படி இருக்கையில் எப்படி உள்ளூர் ஜனங்க, இவங்களுக்கு ஆதரவாக இருக்க முடியும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் நேரத்தில் மட்டுமே நகர்வலம் வரும் தலைவர்களை ஒதுக்கி வைத்தாலும், ஒதுங்கி போகாமல் 'மண்ணின் மைந்தர்' அடையாளத்தை மட்டுமே காட்டினால் மட்டும் வெற்றிக் கொடி நாட்டவா முடியும்.
எரகோள் குடிநீர் திட்டம் கோல்டு சிட்டிக்கு கொண்டு வர கர்ஜிக்க வேண்டியவங்க, கும்பகர்ணனாக இருக்காங்களே, இவங்களோட கொர்... கொர்... துாக்கம் எப்போ கலையுமோ. மக்கள் சேவைக்கு எப்போ திரும்புவாங்களோ?
'ஒன்லி பார் குரோர்பதி'
நா டு முழுதும் செங்கோட்டைக்கும், மாநில அசெம்பிளிக்கும் ஜனங்களோட ஐந்தாண்டுக்குரிய அத்தாட்சி சான்று பெற, 'ஒன்லி பார் குரோர்பதி' என்று எழுதப்படாத சட்டமாக்கி இருக்காங்க. இப்படி இருக்கும் போது, 'பிபிஎல்'லை சேர்ந்த ஒரே ஒருவர், இந்த அவைகளுக்குள் நுழையவா முடியும்.
இதே போல தான் கவர்மென்ட் வேலையில் இடம் பெற, தகுதி எல்லாம் இரண்டாம் பட்சமே. பல 'எல்' கைமாறுகிறவங்களுக்கு தான் 'சான்ஸ்' என்றாகி விட்டதாக அரசு வட்டாரத்தில் பேசுறாங்க.
எனவே, சாதாரண நடுநிலையானவங்களுக்கும், 'பிபிஎல்' காரங்களுக்கும் அரசு வேலை என்பது கலையாத பகல் கனவு. வாய்ப்புகள் என்பது நிலாவை கையில் பிடிக்கிற கதை போல தான் இருக்கு. அப்படின்னா ரயில்வே, வங்கிகள், காவல் துறை, மருத்துவத்துறை, காலி பணியிட அறிவிப்புகள் யாருக்காக சொல்லுங்க பார்க்கலாம்.
அட்வான்ஸ் பட்டுவாடா!
ச ங்க நிர்வாக அதிகாரத்துக்காக ஏட்டிக்குப் போட்டி நடப்பது வழக்கம். பொது தேர்தல்களில் சாதாரணமாக ஒரு ஓட்டின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாயாக உயர்வதா சொல்றாங்க. பணம் பட்டுவாடா என்பது நாடெங்கும் அடிப்படை தகுதியாகவே ஆயிடுச்சி. லஞ்சம், ஊழல், முறைகேடு என்பதை எல்லாம் தடுக்க மெத்த படிச்சவங்க, சமுதாயத்தை திருத்துறவங்க கடமையை செய்யணும்.
ஆனால், சட்டத்தையே கரைச்சி குடிச்சவங்களே, அவங்க சங்க தேர்தலின் தொடக்கமாக, தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல, முதல் அட்வான்ஸ் பட்டுவாடா செய்துட்டாங்களாம். நியாயம், தர்மம் எப்படி ஜெயிக்கும். ஓட்டுக்கு லஞ்சம் தான் ஜெயிக்குமென சொல்றாங்களே.
தேயும் தெற்கு பகுதி!
கோ ல்டு சிட்டியில் முதல் மார்க்கெட் உருவானது ஆ.பேட்டையில் தான். அது சீரழிந்து கிடக்குது; எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதனை மேம்படுத்த புதுசா திட்டமே இல்லை. வடக்கு கிராம பகுதியில் தொழிற் பூங்கா ஏற்படுத்துறாங்க; தெற்கு தேயவிடலாமா. மாரிகுப்பம், ஆ.பேட்டை பற்றி யோசிக்கலயே.
அண்டை மாநில வளர்ச்சியை மனதில் கொண்டு, ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டை இரு மாநில எல்லையோரம் ஏற்படுத்தி வராங்க. இதுக்கு பல கோடிகளை கொட்டியிருக்காங்க. இதன் பிரதிபலனாக கிருஷ்ணா நீரை, கேட்டு வாங்குவாங்களா. ஆ.பேட்டையை தரம் உயர்த்த நல்ல காலம், எப்போது வரப்போகுதோ.