ADDED : அக் 16, 2025 11:22 PM
சொகுசு ஆபீஸ் எதுக்கு?
மு னிசி.,யின் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. நகரின் முதல் குடிமகன் என்ற தகுதியுள்ளவர் முனிசி.,யின் தலைவர். அவர் எங்கே; என்ன செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆப்சென்ட் என்றால், துணைத் தலைவர் அதிகாரத்தை காண்பிக்க வேண்டாமா. இவர்கள் இருவருமே கட்டாய ஓய்வு பெற்று விட்டார்களா. தலைவரும், துணைத் தலைவரும் பதவியில் இருந்தும், இல்லாமல் இருப்பதற்கு சொகுசான ஆபீஸ் எதுக்கு.
கட்டடம் இடிப்பு பணிகளை தலைவர், துணைத் தலைவர் இல்லாமல் யாருடைய அனுமதியில் நிலைக் குழு தலைவர் ஒத்த ஆளாக நின்று நடத்துறாரு. அவருக்கு ஸ்பெஷல் அதிகாரத்தை அரசு எப்போ வழங்கியது. இவரே தலைவரா இருந்தபோது, இந்த இடிப்பு வேலையை ஏன் செய்யலன்னு ஜனங்க அங்கலாய்க்கிறாங்க.
டுபாக்கூர் பயணம்!
த ங்கமான நகரில் இருந்து தேசிய தலைநகருக்கு ஒரு மருத்துவரை அழைத்து சென்று உள்ளனர். கம்பெனி மருத்துவமனையை அவருக்கே வாங்கித்தருவதாக உசுப்பேத்தி மயக்கி அழைத்துப் போனாங்களாம்.
'கல்லா' கட்டுவதில் கறார் பேர்வழியான அவர், நயா பைசா கூட பீஸ் வாங்காமல் இலவசமா சிகிச்சை அளிப்பதாக 'பில்டப்' கொடுத்திருக்காங்க. இவரோட கோரிக்கை மனுவை வாங்கிய செங்கோட்டை அமைச்சகம், விமானம் ஏறி வந்த வழியை பார்த்து திரும்பி செல்லுமாறு ஊர் போய் சேருமாறு சொல்லிட்டாங்களாம்.
மைனிங் தொழிலாளர் நிலுவைத் தொகையை கேட்பதற்காக டில்லிக்கு போறதா சொல்லிட்டு, டுபாக்கூர் வேலையை செய்ததை மைனிங் காரங்க ஏத்துக்குவாங்களா.
கோல்டு மைனிங்கை மீண்டும் ஜாய்ன்ட் வெஞ்சர் மூலம் நடத்தலாமுன்னு உச்ச நீதிமன்றம் உத்தரவு இருந்தும், அது இன்னும் நடைமுறைக்கு வராத போது, கம்பெனி மருத்துவமனையை மட்டும் எப்படி, யார் வழங்குவாங்க. மெத்த படித்தவங்க கூட இப்படி ஏமாத்துறாங்களே.
இருந்ததை இழக்கலாமா?
பே த்தமங்களா ஏரிக்கரையில், 120 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு ஆலையின் பெயர் 'கே.ஜி.எப்., வாட்டர் ஒர்க்ஸ்' என்றே இருந்து வந்தது. தற்போது, கர்நாடக குடிநீர் வழங்கல் வாரியம்னு பெயரை மாற்றியிருக்காங்க.
பேத்தமங்களா குடிநீருக்கும், கே.ஜி.எப்.,க்கும் சொந்த பந்தமே இல்லாமல் ஆக்கிட உள் வேலையா இருக்குமோன்னு ஜனங்க கேக்கிறாங்க. ஏற்கனவே பேத்தமங்களா குடிநீரு கிடைச்சு பல வருஷமாச்சு. மீண்டும் அந்த குடிநீர் கிடைக்குமா என்பதும் குதிரை கொம்பு தான். இருந்ததை இழப்பதே கோல்டு நகருக்கு வழக்கமா போச்சு.
விமோசனம் எப்போது?
கோ ல்டு சிட்டியின் மையப்பகுதியான உரிகம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக 25 ஆண்டா, பல சர்வே பணிகள் நடத்தினதை தான் பார்க்க முடிந்ததே தவிர, ஆக்கப்பூர்வ வேலையை இன்னும் துவக்கவே இல்லை. இதுக்கு இடைஞ்சலா இருக்கிற கட்டடங்களை இடித்து தள்ளுவதா எச்சரிக்கை செய்வதும், பின்னர் ஆபீசர் மாற்றம், மந்திரி, எம்.பி., - எம்.எல்.ஏ., மாற்றம், கான்ட்ராக்டர் ஓட்டம்னு கதை அளப்பது தான் நடந்து வருது. மேம்பாலம் அமையும் என கனவு தான் காணணும் போல.
இப்படித்தான் எதாவது ஒரு காரணத்தை சொல்லி, மாரிகுப்பம் -- குப்பம் இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற்றாம 30 ஆண்டுகளை கடத்திட்டாங்க. இன்னும் கூட ரயில்வே இணைப்பு பாதை திட்டம் முடிஞ்ச பாடில்லை. இன்னும் எத்தனை காலம் தான் தாமதம் செய்வாங்களோ?