/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவுன்சிலர்கள் இல்லாத தங்கவயல் நகராட்சி குவியும் குப்பைகள்; பெருகும் கொசுக்கள்
/
கவுன்சிலர்கள் இல்லாத தங்கவயல் நகராட்சி குவியும் குப்பைகள்; பெருகும் கொசுக்கள்
கவுன்சிலர்கள் இல்லாத தங்கவயல் நகராட்சி குவியும் குப்பைகள்; பெருகும் கொசுக்கள்
கவுன்சிலர்கள் இல்லாத தங்கவயல் நகராட்சி குவியும் குப்பைகள்; பெருகும் கொசுக்கள்
ADDED : டிச 12, 2025 06:48 AM

தங்கவயல்: தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் வார்டுகளில் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு காணப்படுகிறது.
நகராட்சி கவுன்சிலர்கள் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் வார்டில் அத்தியாவசிய தேவைகளுக்கு அக்கறை காண்பித்து வந்தனர். தற்போது, நகராட்சி கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்து ஒரு மாதம் கடந்துள்ளது. வார்டுகளில் கவுன்சிலர்கள் இல்லாததால் எங்கும் குப்பைகள் குவிகின்றன. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
அடுத்த தேர்தலில் போட்டியிட பலரும் முற்பட்டு வருகின்றனர். இத்தகையோர் பார்வையில் காணப்படும் குப்பைகள், சுற்றுப் புற சுகாதார சீர்கேடு அதிகாரிகள் கண்ணில் ஏன் படவில்லை என தெரிய வில்லை.
சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வார்டு தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தும், ஜாதி இட ஒதுக்கீடு வந்தால் தான் முழுமை பெறும். தேர்தலில் போட்டியிட ஜாதி இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனால் உழைப்பு வீணாகி விடும் என்ற தயக்கத்துடன் சிலர் உள்ளனர்.
காங்கிரஸ், பா.ஜ., உட்பட சில கட்சிகள் 35 வார்டுகளிலும் போட்டியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், வார்டு வளர்ச்சி மீது கவனம் செலுத்துகின்றனரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் மூடி கிடக்கும் நவீன கழிப்பறையை திறக்க முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை.
சுரங்க குடியிருப்பு பகுதியில் 16 வார்டுகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டமே இல்லை. சுத்தமான குடிநீருக்கு நிரந்தர தீர்வு இல்லை. கே.சி., வேலி நீருக்காக பதிக்கப்பட்ட இரும்பு குழாய்களில் காற்று மட்டுமே உள்ளது. ஒரு சொட்டு தண்ணீரும் கிடைக்கவில்லை.
எரகோள் அணை நீர் தங்கவயலுக்கும் கிடைக்கும் என வாய்ப்பந்தல் போட்டது தான் மிச்சம். அதற்கும் விடிவு காலம் பிறக்கவில்லை.
இந்த லட்சணத்தில் நகராட்சி கவுன்சிலர் தேர்தல் உற்சாகத்துக்கு மட்டும் பஞ்சமில்லை.

