/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் போலீசார் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
/
தங்கவயல் போலீசார் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
ADDED : மே 16, 2025 11:05 PM

தங்கவயல்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து தங்கவயல் போலீசார், நேற்று ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் ஒத்திகை நடத்தினர்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்வது; அவர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி புகை பரப்புதல்; முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டு, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆகிய நடவடிக்கைகள் இடம் பெற்றன.
பொதுமக்கள் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த தீவைத்து கொளுத்தினால் அணைப்பது; தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டு வருவது; சந்தேகத்துக்குரிய வெடிப்பொருட்களை நிபுணர்கள் சோதனை செய்வது; மோப்ப நாய்களின் செயல்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டது.
இப்பணியில் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தின் துப்பாக்கி ஏந்திய போலீசார், வெடிகுண்டு சோதனை குழு, மோப்ப நாய்கள், தீயணைப்புப் படையினர் ஆகியோரின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எஸ்.பி., சாந்தராஜு பேசுகையில், ''பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க போலீஸ் துறை எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் தயார் நிலையில் உள்ளது. போலீஸ் துறை மட்டுமல்ல அரசின் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது.
''எந்த தகவல் கிடைத்தாலும் பொது மக்கள், உடனடியாக 112 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை தெரிவித்து குழப்பம் அடைய செய்யக் கூடாது,'' என்றார்.
டி.எஸ்.பி., பாண்டுரங்கா, தங்கவயலின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள், தங்கவயல் தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.