/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊதியம் கேட்ட தொழிலாளியை கொன்ற தாபா உரிமையாளர் கைது
/
ஊதியம் கேட்ட தொழிலாளியை கொன்ற தாபா உரிமையாளர் கைது
ஊதியம் கேட்ட தொழிலாளியை கொன்ற தாபா உரிமையாளர் கைது
ஊதியம் கேட்ட தொழிலாளியை கொன்ற தாபா உரிமையாளர் கைது
ADDED : ஜன 10, 2026 06:47 AM
பெங்களூரு: செய்த வேலைக்கான கூலியை கேட்ட தொழிலாளியை, ஹெலிகாப்டர் காட்டுவதாக கூறி அழைத்து சென்று, கொலை செய்த தாபா உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தார்வாடின் யல்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ரவி ஹொன்னம்மனவர், 28. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர், பிழைப்பு தேடி பெங்களூருக்கு வந்தார். கே.பி.அக்ரஹாராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். 'பிரைடு ரைஸ்' தயாரிக்கும் பணியை செய்தார்.
ஏதோ காரணத்தால், அங்கு வேலையை விட்டு விட்டு, சில மாதங்களாக மாதவராவில் உள்ள, 'சுப்ரியா தாபா'வில் சமையல்காரராக பணிக்கு சேர்ந்தார். தாபா உரிமையாளர் சந்தன் பக்கா, தன் தாபாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சரியாக ஊதியம் கொடுப்பதில்லை. அதேபோல, ரவிக்கும் ஊதியம் கொடுக்கவில்லை. அவ்வப்போது ஊதியத்தை கேட்டு ரவி நெருக்கடி கொடுத்ததால் கடுப்படைந்த சந்தன் பக்கா, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
புத்தாண்டு தினத்தன்று இரவு, ஊதியம் தருவதாக ஆசை காட்டி, ரவியை பாருக்கு அழைத்து சென்று அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்க வைத்தார். அவர் போதையானதும் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தை காட்டுகிறேன் வா என்று கூறி, பி.ஐ.இ.எல்., மைதானத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். அதன்பின், அவரது உடலை மொபைல் போனில் போட்டோ எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.
கொலை செய்ததால், போலீசார் கைது செய்வார்களோ என்ற பயம், சந்தன் பக்காவை வாட்டியது; துாங்க முடியவில்லை. அதிகாலை, 2:00 மணியளவில், ரவியின் உடல் கிடந்த இடத்துக்கு வந்தார்; உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினார்.
அடையாளம்தெரியாத ஆணின் உடல், பாதி எரிந்த நிலையில் கிடப்பதை அறிந்த மாதவரா போலீசார், அங்கு சென்று உடலை மீட்டு, விசாரணை நடத்தி கொலையானது ரவி என்பதை கண்டுபிடித்தனர்.
அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் விசாரித்த போது, தாபா உரிமையாளர் சந்தன் பக்கா மீது சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை தேடி வந்தனர்.
பெள்ளூர் கிராஸ் அருகேயுள்ள மாட்டுக் கொட்டகையில், அவர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று அதிகாலை அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 'தாபா நஷ்டத்தில் இயங்கியது. ஊதியம் வழங்க சிறிது அவகாசம் கேட்டேன். அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், ரவி தகாத வார்த்தைகளை பேசியதற்காக கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார்.

