அமைச்சர் மகனை அமர வைத்து அதிகாரிகளை நிற்க வைத்த நிர்வாகம்
அமைச்சர் மகனை அமர வைத்து அதிகாரிகளை நிற்க வைத்த நிர்வாகம்
ADDED : ஏப் 23, 2026 04:21 AM

கொப்பால்: அரசு ஆலோசனை கூட்டத்தில், அமைச்சரின் மகனை இருக்கையில் அமர வைத்து, அதிகாரிகளை நிற்க வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவின் கனககிரி உத்சவ ஏற்பாடுகள் குறித்து, நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கன்னடம், கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் மகன் ஷஷாங்க், மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் தாசில்தார் விஸ்வநாத் முரடி, தாலுகா பஞ்சாயத்து இ.ஓ., ராஜசேகர் அமர இருக்கை இல்லை; அவர்கள் நின்றிருந்தனர்.
விதிமுறைப்படி அரசு ஆலோசனை கூட்டங்களில், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இங்கு அமைச்சரின் மகனுக்கு, ராஜமரியாதை அளித்த மாவட்ட நிர்வாகம், உயர் அதிகாரிகளை மேடையில் நிற்க வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'அமைச்சரின் மகன் என்ற ஒரே காரணத்தால், அதிகாரிகளை மரியாதை இல்லாமல் நிறுத்தியது சரியல்ல. அமைச்சரை விட அவரது மகன் செல்வாக்கானவரா. அரசு நிகழ்ச்சியில், அமைச்சரின் மகனுக்கு என்ன வேலை. அரசு அதிகாரிகளே தாங்கள் நின்றுள்ள போட்டோக்களை, ஸ்டேடஸ் வைத்துள்ளனர். அவர்களின் அருகிலேயே, அமைச்சரின் மகன் அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் நின்றுள்ளனர்' என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தியதால் எச்சரிக்கை அடைந்த அமைச்சர் சிவராஜ் தங்கடகி, 'என் மகன் செய்தது தவறு. அரசு நிகழ்ச்சியில் மூலையில் கூட அமர, என் மகனுக்கு அனுமதியில்லை. அவர் மேடையில் அமர்ந்தது தவறு. அவர் மக்கள் பிரதிநிதி அல்ல. நான்தான் மக்கள் பிரதிநிதி' என விளக்கம் அளித்துள்ளார்.
