ADDED : மே 11, 2026 11:16 PM

- நமது நிருபர் -:
தோஷங்களை நிவர்த்தி செய்யும் சூரிய நாராயணர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்; தோஷங்களை நிவர்த்தி செய்ய பூஜைகள் செய்கின்றனர்.
தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரு நகரின், மரோளி கிராமத்தில் அமைந்துள்ளது சூரிய நாராயணர் கோவில். 1,200 ஆண்டுகள் பழமையானது. புராதனமான இக்கோவில் புண்ணிய தலமாக விளங்குகிறது. கட்டட கலைக்கு பெயர் பெற்றுள்ளது. மகரிஷிகள் தவம் புரிந்ததால், சூரிய தேவன் இங்கு நிலை கொண்டுள்ளதாக ஐதீகம்.
ஜெயின் ராணி ஒருவர், சூரிய தேவன் கோவிலை புதுப்பித்து கட்டினார். கர்ப்பக்கிரஹத்தை சுற்றிலும் கட்டப்பட்ட கம்பங்களில், ராசிகள், நட்சத்திரங்கள், தேவதைகளின் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 90 கம்பங்கள் கொண்டுள்ள கோவில், தமிழகத்தை சேர்ந்த சிற்பி ஒருவரின் கை வண்ணத்தால், அற்புதமாக வடிவமைக்கப்பட்டது. இயற்கையான பொருட்கள் பயன்படுத்தி கட்டப்பட்டது.
பிரம்மன், விஷ்ணு, சிவன் என, மும்மூர்த்திகளின் சக்திகள் ஒருங்கிணைந்து, இங்கு சூரிய தேவனாக வணங்கப்படுவதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோவில் அதிக பிரபலம் அடைந்தது. இதனால் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக ரத சப்தமி மற்றும் திருவிழாக்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
எந்த பரபரப்பும் இல்லாமல், அமைதியான சூழலில், அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளதால், பக்தர்கள், ஆன்மிகவாதிகளை இக்கோவில் இழுக்கிறது.
சூரிய நாராயணரை தரிசித்தால், தோஷங்கள் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். தினமும் இங்கு பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடக்கின்றன.
தோஷங்கள் நிவர்த்திக்காக ஆதித்ய ஹிருதய நாராயணா யாகம், ஜெய மிருதுஞ்ஜெய யாகம், மார்க்கண்டேயா யாகம் உட்பட, பல விதமான யாகம் நடக்கிறது.
தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பின், பூஜைகள், யாகங்கள் நடத்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
தொலைவில் உள்ள மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு, காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் சமூக அக்கறை, மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது.
கோவிலின் தலைமை அர்ச்சகர் கணபதி ஹெக்டே கூறியதாவது:
சூரிய நாராயணர் கோவில், 1,200 ஆண்டுகள் வரலாறு கொண்டது. முனிவர்களின் கடுந்தவத்தால், சூரிய நாராயணர் இங்கு குடி கொண்டார். புண்ணியத்தலமான இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், கிராமத்தினர் உதவியுடன் தினம் மூன்று வேளை அன்னதானம் ஏற்பாடு செய்துள்ளது.
மக்களின் சேவையே மகேசனின் சேவையாகும். வரும் நாட்களில் கோவில் மேலும் மேம்பட வேண்டும் என்பது, எங்களின் விருப்பம்.
கோவிலில் தினமும் காலை 6:00 மணிக்கு, மதியம் 12:00 மணிக்கு, இரவு 8:00 மணிக்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இங்கு நடக்கும் யாகங்களில் பங்கேற்றால், பல நன்மைகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
க ர்நாடகாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மங்களூருக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ்கள், ரயில்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மங்களூரு, பம்ப்வெல், பண்ட்வால், கங்கநாடி, உல்லால் உட்பட பல இடங்களில் இருந்து, காலை முதல் மாலை வரை அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது, பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
விமானத்தில் வருவோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம். மங்களூரின் பம்ப்வெல்லில் இருந்து, 2.5 கி.மீ., தொலைவில், சூரிய நாராயணர் கோவில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்
காலை, 6:00 மணி முதல், மதியம் 1:30 மணி வரை, மாலை 5:00 மணி முதல், இரவு 8:30 மணி வரை
தொடர்பு எண் 99457 79524
அருகில் உள்ள கோவில்கள்: கத்ரி மஞ்சுநாதர் கோவில், ஹரே கிருஷ்ணா கோவில், மஹாகாளி கோவில், யோகேஸ்வர் மடம், வீர நாராயணர் கோவில், மாரிகாம்பா கோவில்.
