தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெட்டி பாம்பாக அடங்கிய விஜயேந்திரா எதிர்ப்பு அணி

பெட்டி பாம்பாக அடங்கிய விஜயேந்திரா எதிர்ப்பு அணி

பெட்டி பாம்பாக அடங்கிய விஜயேந்திரா எதிர்ப்பு அணி


ADDED : மார் 11, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் என்ற பெருமை, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு உண்டு. இவர் கூறும் நபர்களை தான் வேட்பாளர்களாகவும் கட்சி அறிவித்தது. தற்போதும் வேட்பாளர்களை தேர்வு செய்யும், மத்திய ஆட்சி மன்றக்குழுவில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இவரது 2வது மகனான விஜயேந்திராவை 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், கர்நாடக பா.ஜ., தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. அரசியலில் போதிய அனுபவம் இல்லாதவர்; முதல்முறை எம்.எல்.ஏ., என்பதால் விஜயேந்திராவின் தலைமையை ஏற்க, கட்சியின் மூத்த தலைவர்கள் மறுத்தனர்.

இளம் தலைவர்

குறிப்பாக பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில், விஜயேந்திராவுக்கு எதிராக ஒரு அணி உருவாகியது. அந்த அணியில் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ், முன்னாள் அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, குமார் பங்காரப்பா, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் அடிக்கடி டில்லி சென்று, கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து, விஜயேந்திராவுக்கு எதிராக புகார் அளித்தனர். காங்கிரசுடன் ஒப்பந்த அரசியல் செய்வதாக கூறி, அவரை மாற்றும்படி அழுத்தம் கொடுத்தனர்.

இதையடுத்து கர்நாடக பா.ஜ., புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும் என்று, கட்சி மேலிடமும் அறிவித்தது. அதே நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பசனகவுடா பாட்டீல் எத்னால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இதுவரை புதிய தலைவரை தேர்வு செய்ய, தேர்தல் நடத்த பா.ஜ., மேலிடம் ஆர்வம் காட்டவில்லை. கட்சியின் தேசிய தலைவரான நிதின் நபின் இளம் தலைவர் என்பதால், இளம் தலைவரான விஜயேந்திராவுக்கு அவரது ஆதரவு இருப்பதாக கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.

சீட் கிடைக்காது

தங்கள் சார்பாக பேச மேலிட தலைவர்கள் யாரும் இல்லாததால், விஜயேந்திரா எதிர்ப்பு அணியினர் பெட்டி பாம்பாக அடங்கி உள்ளனர். எத்னாலை கட்சியில் இருந்து நீக்கியது போன்று, தங்களையும் நீக்கி விடலாம் என்ற பயத்தில் இப்போது யாருமே, விஜயேந்திராவுக்கு எதிராக பேசுவதே இல்லை. முன்பு அடிக்கடி ஒன்று கூடிய எத்னால் அணியினர், இப்போது எங்கும் கூடுவது இல்லை.

சட்டசபையில் கூட ரமேஷ் ஜார்கிஹோளியும், ஹரிசும் பேசுவது கூட இல்லை. அதிருப்தி அணியினர் தற்போது அவரவர், வேலையை பார்க்க ஆரம்பித்து உள்ளனர். விஜயேந்திராவை பகைத்து கொண்டால், அடுத்த சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காது என்று குமார் பங்காரப்பா, ஹரிஷ் உள்ளிட்டோர் நினைக்கின்றனர்.

இது, விஜயேந்திராவுக்கு சாதகமாக மாறி உள்ளது. அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று எழுந்த குரல்கள் எல்லாம் இப்போது அடங்கி விட்டது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us