அமைச்சர்களின் செயல் திறனை ஆய்வு செய்யும் மேலிடம்
அமைச்சர்களின் செயல் திறனை ஆய்வு செய்யும் மேலிடம்
ADDED : மார் 18, 2026 05:20 AM
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் உள்ள, சில அமைச்சர்கள் சரியாக பணியாற்றுவது இல்லை. எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய அமைச்சர்களை நீக்க, முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே அமைச்சர்களின் செயல் திறனை, மேலிடமும் கண்காணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த சில மாதங்களிலேயே, அமைச்சர்கள் சிலர் மீது எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தங்கள் தொகுதிகளின் பிரச்னைகளை, காது கொடுத்து கேட்பது இல்லை. போன் செய்தால் எடுப்பதும் இல்லை. நேரில் சந்திக்க சென்றாலும் சந்திப்பது இல்லை என, புலம்ப ஆரம்பித்தனர்.
அரசு இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், குரல் கொடுக்க துவங்கினர். அமைச்சரவையை மாற்றி அமைத்து, தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, பலர் மன்றாடுகின்றனர். இதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அவ்வப்போது டில்லிக்கு சென்று, மேலிட தலைவர்களை சந்தித்தும் வருகின்றனர்.
இதுகுறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கும், நெருக்கடி கொடுக்கின்றனர். 2023ல் காங்கிரஸ் அரசு அமைந்த போது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே போட்டி எழுந்ததை போன்று, அமைச்சர் பதவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் முட்டி மோதினர்.
அப்போது அரசு இரண்டரை ஆண்டு பதவிக்காத்தை நிறைவு செய்த பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என, மேலிடம் உறுதி அளித்திருந்தது.
கடந்த, 2025ன் நவம்பரில் அரசுக்கு இரண்டரை ஆண்டு நிறைவடைந்தது. எனவே அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி, மூத்த எம்.எல்,ஏ.,க்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதில், முதல்வர் சித்தராமையாவுக்கும், ஆர்வம் உள்ளது.
இவரது அமைச்சரவையில் உள்ள, சில அமைச்சர்களின் பணிகளில் முதல்வருக்கு திருப்தி இல்லை. தாங்கள் மாநிலம் முழுவதுமான அமைச்சர் என்பதை மறந்து, அவரவர் தொகுதி நலனில் மட்டுமே, அக்கறை காட்டுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்தாண்டு பல மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், அமைச்சர்கள் மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, சூழ்நிலையை ஆய்வு செய்யவில்லை. சிலர் பெயரளவில் ஆய்வு செய்ததாக கூறப்பட்டது.
அதேபோன்று, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்களின் பிரச்னைகளையும் கேட்டறிவது இல்லை. அவரவர் துறைகளை சரியாக நிர்வகிப்பதில்லை. ஒவ்வொரு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும் போதும், அமைச்சர்கள் மீது அவர்கள் புகார் பட்டியல் வாசிக்கின்றனர்.
சரியாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, சுறுசுறுப்பாக பணியாற்றுவோரை அமைச்சராக்கும்படியும் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துகின்றனர்.
சில நாட்களுக்கு முன், நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கூட, 'அமைச்சர்கள் சர்வாதிகாரிகள் போன்று நடந்து கொள்கின்றனர். போலீஸ்துறை உட்பட, அனைத்து துறைகளின் அதிகாரிகள் இடமாற்றத்தில், எங்களுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக நடந்து கொள்கின்றனர். எங்களின் கருத்துகளை மதிப்பது இல்லை' என, அதிருப்தி தெரிவித்தனர்.
சித்து அரசு இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், காங்கிரஸ் மேலிடமும், அமைச்சர்களின் செயல் திறனை தொடர்ந்து கண்காணிக்கிறது.
முதல்வர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டியவர்கள், புதிதாக சேர்க்க வேண்டியவர்களின் பட்டியலை தயாரித்துள்ளார். பட்ஜெட் கூட்டம் முடிந்த பின், இந்த பட்டியலுடன் டில்லிக்கு சென்று, மேலிடத்தின் ஒப்புதலை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களின் செயல் திறன் குறித்து, மேலிடமும் ஆய்வு செய்து தெரிந்து கொண் டுள்ளதால், அமைச்சரவையை மாற்றி அமைக்க, ' கிரீன் சிக்னல்' காட்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு மேலிடம் தயாராவதால், கர்நாடகாவை பற்றி ஆர்வம் காட்டாது .
அமைச்சரவையை மாற்றி அ மைக்கப்படாது என, அமைச்சர்கள் நம்புகின்றனர். பட்ஜெட் கூட்டம் முடிந்த பின்னரே, இதற்கு விடை தெரியும்.
-நமது நிருபர் -
