ADDED : ஏப் 16, 2025 08:37 AM
முதல்வர் சித்தராமையா, லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், 'காவேரி' இல்லத்தில் நேற்று மாலை பேச்சு நடத்தினார். இதில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் உட்பட, பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர் சித்தராமையா, ''இம்முறை பட்ஜெட்டில், டீசல் மீதான வரி இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டால், நமது மாநிலத்தில் குறைவாகவே உள்ளது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து, அரசுக்கு புரியும். அரசு ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளது.
''அரசுடன் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். சாலைகள் மேம்பாட்டுக்கு மாநில அரசு, ஆண்டு தோறும் 14,000 கோடி ரூபாய் செலவிடுகிறது. உங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். பொது மக்களின் நன்மையை கருதி, போராட்டத்தை நிறுத்துங்கள்,'' என வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் இதை ஏற்காத லாரி உரிமையாளர் சங்கத்தினர், 'கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, கால வரையின்றி போராட்டம் நீடிக்கும்' என, கூறினர். முதல்வர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.

