/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாதம் பாதித்தவர்களின் வாழ்க்கையை மாற்றிய தம்பதி
/
வாதம் பாதித்தவர்களின் வாழ்க்கையை மாற்றிய தம்பதி
ADDED : நவ 08, 2025 11:03 PM

வாதம் பாதித்தவர்களுக்கான மையத்தை துவங்கி, தங்கள் பணிகளை அவர்களே செய்யும் வகையில் பயிற்சி அளித்து, பெங்களூரை சேர்ந்த தம்பதி சாதித்துள்ளனர்.
பெங்களூரு கல்யாண் நகரில் அமைந்துள்ளது 'தியா பவுண்டேஷன்'. இந்த பவுண்டேஷன் வாதம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, தங்கள் பணிகளை அவர்களே செய்து கொள்ள பயிற்சி அளிக்கிறது.
இம்மையத்தை சாரா சாந்தாமரியா, அவரது கணவர் ஜெரால்டு ஆகியோர் இணைந்து, 1999ல் துவக்கினர்.
இதுகுறித்து சாரா சாந்தா மரியா கூறியதாவது:
மும்பையின் கான்வென்ட் ஆப் ஜீசஸ் அண்டு மேரி ஸ்பெஷல் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றினேன். அப்போது மனநலம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் அவர்களின் பெற்றோர் குறித்து எனக்கு வேதனை அளித்தது.
இத்தகைய மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக, மும்பையில் உள்ள எஸ்.என்.டி.டி.,யில் சேர்ந்து சிறப்பு கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றேன். படிப்பு முடித்த பின், முதுகலை பட்டம் பெற, அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு சென்றபோது தான், மாற்றுத்திறனாளிகளுக்கு உழைப்பின் தெரிந்து வைத்திருப்பதை அறிந்தேன்.
இத்தகையவர்கள் உணவகங்கள், துப்புரவு பணியாளர்கள், கடை உதவியாளர்கள் போன்ற வேலைகள் செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இத்தகைய தெளிவு இல்லை.
இந்தியாவில் உள்ள இத்தகைய மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் மற்ற மாணவர்கள் போன்று வழக்கமான பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால், தங்கள் பிள்ளைகளை சாதாரண பள்ளியில் சேர்க்க முடியாத பெற்றோர் விரக்தி அடைகின்றனர்.
அமெரிக்காவில் படிப்பு முடித்த பின், 1994ல் இந்தியாவுக்கு திரும்பினேன். 1995ல் திருமணம் நடந்தது. கணவருடன் பெங்களூரில் குடியேறினேன். பெங்களூரில் சோபியா பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினேன்.
அதன் பின், கணவருடன் இணைந்து, 1999ல் பெங்களூரில் தியா பவுண்டேஷன் என்ற அமைப்பை துவக்கினோம்.
இங்கு வாதம் பாதித்தவர்களுக்கு, அவர்களே தங்கள் பணிகளை செய்து கொள்வது குறித்து கற்பிக்க துவங்கினோம். சமையல் அறையில் முட்டை வேகவைத்தல், சாதம் சமைத்தல், சாண்ட்விச் ஒன்றாக வைப்பது, தொலைந்து போனால், வீட்டுக்கு திரும்பும் வழியை கண்டுபிடிப்பது, உடை அணிவது, கழிப்பறையை பயன்படுத்துவது போன்றவற்றை கற்பித்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி, 2013ல் தியா இன்னோவேஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் துவக்கினோம். இங்கு மற்றவர்களின் கண்காணிப்பு இல்லாமல், மாணவர்கள் கைத்தொழில் பயிற்சி பெறுகின்றனர். தற்போது இங்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மெழுகுவர்த்தி, சாக்லேட் தயாரிக்கின்றனர். அது தவிர, டேட்டா என்ட்ரி, தோட்டம் பராமரிப்பு பணிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருமூளை வாதத்தால் பாதித்த சுரேஷ், 18 வயதில் இங்கு பணியில் சேர்ந்தார். தற்போது 29 வயதாகும் இவருக்கு, தனிப்பட்ட நிதிகளை நிர்வகித்தல், வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட தேவைகளை பராமரிப்பது, பொறுப்பான குடியுரிமை போன்று பல்வேறு திறமைகளை கற்றுக்கொண்டுள்ளார்.
அதுபோன்று மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட புவனா, காகித பேக்குகள், பரிசு பொருட்களை பேக் செய்வதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
- நமது நிருபர் -

