/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசின் தினக்கூலி ஊழியர் வாங்கி குவித்த சொத்துகள்... ரூ.100 கோடி!: மாதம் ரூ.15,000 ஊதியம் வாங்கியவர் 'அபாரம்' 'ரெய்டு' நடத்திய லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி
/
அரசின் தினக்கூலி ஊழியர் வாங்கி குவித்த சொத்துகள்... ரூ.100 கோடி!: மாதம் ரூ.15,000 ஊதியம் வாங்கியவர் 'அபாரம்' 'ரெய்டு' நடத்திய லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி
அரசின் தினக்கூலி ஊழியர் வாங்கி குவித்த சொத்துகள்... ரூ.100 கோடி!: மாதம் ரூ.15,000 ஊதியம் வாங்கியவர் 'அபாரம்' 'ரெய்டு' நடத்திய லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி
அரசின் தினக்கூலி ஊழியர் வாங்கி குவித்த சொத்துகள்... ரூ.100 கோடி!: மாதம் ரூ.15,000 ஊதியம் வாங்கியவர் 'அபாரம்' 'ரெய்டு' நடத்திய லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி
ADDED : ஆக 02, 2025 01:47 AM

கொப்பாலின், கே.ஆர்.ஐ.டி.எல்.,லில், சிஞ்சோளிகர் என்பவர், செயல் நிர்வாக பொறியாளராக இருந்தார். அவர் பணியில் இருந்த 2023 மற்றும் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் கொப்பால் மாவட்டத்தில், அடிப்படை வசதி திட்டங்களின் பெயரில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
பொய்யான பில்கள் தயாரித்து, 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்ததாக நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
துறைரீதியான விசாரணையில் சிஞ்சோளிகர், ஒப்பந்த ஊழியராக இருந்த களசப்பா நிடகுந்தியுடன் கூட்டு சேர்ந்து பல்வேறு மோசடி செய்தது தெரிய வந்தது.
கே.ஆர்.ஐ.டி.எல்., சாக்கடை அமைப்பது, குடிநீர் வழங்கும் பணிகளின் பெயரில், பெருமளவில் பணம் சுருட்டியது தெரிந்தது. மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., கையெழுத்தும் மோசடியாக போட்டதுடன் போலி பில்களை உருவாக்கி அரசு கருவூலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக, கடந்தாண்டு சிஞ்சோளிகர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஒப்பந்த ஊழியரான களசப்பாவுக்கும் தொடர்பிருப்பது உறுதியானதால், கடந்த வாரம் அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
முறைகேடு தொடர்பாக, சிஞ்சோளிகர், ஒப்பந்த ஊழியர் களசப்பா மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது, லோக் ஆயுக்தாவில் கே.ஆர்.ஐ.டி.எல்., அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர். இதன்படி லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் கொப்பாலின், பிரகதி நகரில் உள்ள களசப்பா நிடகுந்தியின் இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த சொத்து ஆவணங்களை கண்டு, லோக் ஆயுக்தா அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட, 24 வீடுகள், கொப்பாலில் பிரபலமான பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட மனைகள், 40 ஏக்கர் விவசாய நில ஆவணங்கள் கிடைத்தன.
அது மட்டுமின்றி, 350 கிராம் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், இரண்டு பைக்குகள், இரண்டு கார்கள், ரொக்கப்பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
பணி நீக்கம் செய்யப்பட்டபோது, கடைசியாக மாதம் 15,000 ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். சாதாரண தினக்கூலியான இவரிடம், 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் எப்படி வந்திருக்க முடியுமென, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தன் மனைவி, சகோதரர், மனைவியின் சகோதரர்கள் பெயரில், களசப்பா நிடகுந்தி சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளார்.
களசப்பா 20 ஆண்டுகளாக, கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார். இவர் வைத்துள்ள சொத்து ஆவணங்களை அதிகாரிகள் வசப்படுத்தியுள்ளனர். நேற்று அதிகாலை 6:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது.
நேற்று காலை மீண்டும் அவரது இல்லத்தில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து, மேலும் பல ஆவணங்களை கைப்பற்றினர்.
தினக்கூலியாக பணியில் அமர்ந்து, அலுவலகத்தில் துப்புரவு பணி செய்த களசப்பா, அதன்பின் உதவியாளராக பணியாற்றினார். இவரது சொத்துகள் குறித்து, லோக் ஆயுக்தா அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.