தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துபாரே சம்பவம் சுற்றுலா பயணியருக்கு ஒரு எச்சரிக்கை!

 துபாரே சம்பவம் சுற்றுலா பயணியருக்கு ஒரு எச்சரிக்கை!

 துபாரே சம்பவம் சுற்றுலா பயணியருக்கு ஒரு எச்சரிக்கை!


ADDED : மே 20, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள துபாரே யானைகள் முகாம், சுற்றுலா பயணியரால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது. முகாமில் வளர்க்கப்படும் யானைகளுடன், கொஞ்சி விளையாட வாய்ப்பு கிடைப்பதால், சுற்றுலா பயணியர் இங்கு வர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், துபாரேயில், மூன்று நாட்களுக்கு முன் நடந்த சம்பவம், சுற்றுலா வருவோர் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

இரண்டு யானைகளுக்கு இடையே நடந்த மோதலில், ஒரு யானையின் அடியில் சிக்கி, சென்னை சுற்றுலா பயணி ஜின்சு, 33, கணவர் கண் முன்பே உயிரிழந்தது ஆறாத வடுவாக மாறி உள்ளது. உண்மையை சொல்ல போனால், இந்த சம்பவம் கண்டிப்பாக சுற்றுலா பயணியருக்கு ஒரு எச்சரிக்கை மணி தான்.

வனவிலங்குகள் எப்போதும் ஒரே மன நிலையில் தான் இருக்கும் என்று சொல்லவே முடியாது. மனிதர்களை போலவே கோபம், பயம், மகிழ்ச்சி, கவலை போன்ற உணர்வுகள், விலங்குகளுக்கும் உண்டு. ஆனால், இதை மனிதர்கள் புரிந்து கொள்வது இல்லை.

வனப்பகுதியில் 'சபாரி' செல்லும் போது, அமைதியாக நிற்கும் வனவிலங்குகளை சீண்டுவது; யானைகள் முகாமுக்கு செல்லும் போது யானை அருகில் நின்று 'செல்பி' எடுப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்கின்றனர்.

வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள் என்று வனத்துறை, எத்தனை முறை எச்சரிக்கை, அறிவுறுத்தல் வழங்கினாலும் யாரும் கேட்பது இல்லை.

ஊருக்குள் வன விலங்குகள் வந்து விட்டால் அடித்து துரத்த நினைக்கும் மனித சமூகம் தான், சபாரி செல்லும் போது வனவிலங்குகளுடன் இணைந்து புகைப்படம் எடுக்கவும் நினைக்கின்றனர்.

இப்படி, மனிதர்கள் மனநிலையை மாறும் போது, விலங்குகள் மட்டும் ஒரே மனநிலையில் இருக்கும் என்று நினைப்பதே முதலில் தவறு. வனவிலங்குகளை, வனவிலங்கு என்று முதலில் பாவிக்க வேண்டும். நாம் இழுக்கும் இழுப்புக்கு எல்லாம் வரும் என நினைத்தால், நிச்சயமாக நமக்கு தான் பேராபத்து.

துபாரே யானைகள் முகாம் சம்பவத்தை கருதி, இனியாவது சுற்றுலா பயணியர், வன விலங்குகளிடம் ஜாக்கிரதையாக இருந்தால் உயிரிழப்புகளில் இருந்து தப்பிக்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us