/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இசை கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாலே!
/
இசை கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாலே!
இசை கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாலே!
இசை கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாலே!
ADDED : செப் 27, 2025 11:08 PM

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களுரு புறநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக், 58. இவர் துளு நாட்டு பாரம்பரிய இசை கருவிகளில் ஒன்றான 'தாசே'வை செய்து வருகிறார். தாசே என்பது கல்யாண மண்டபத்தில் வாசிக்கும் தவில் போன்ற ஒரு கருவியாகும். துளு கலாசாரத்தில் இந்த இசை கருவிக்கு என தனி இடமுண்டு. அதுமட்டுமின்றி நீண்ட நெடிய வரலாறு உள்ளது.
இசைக்கருவியை தன் சிறுவயதில் இருந்து செய்து வருகிறார். இசைக்கருவி தயாரிக்க, இயந்திரங்கள் பல வந்தாலும், அவைகள் உதவியின்றி தன் கைகளாலே தயாரிக்கிறார். இதனால், கருவியின் தன்மை அற்புதமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்த இசைக்கருவியை தயாரிப்பதை, தனது தந்தை ஷேக் அமீர் உசேனிடம் இருந்து கற்று கொண்டார்.
இவருக்கு வயது 58 ஆனாலும், கடினமாக உழைத்து வருகிறார். இவர் முஸ்லீமாக இருந்து கொண்டு, துளுவில் நடக்கும் ஹிந்து கலாசார விழாவிற்கு இசை கருவிகள் செய்து தருவதால் பிரபலமாக உள்ளார்.
இது குறித்து ரபீக் கூறியதாவது:
எனக்கு தற்போது 58 வயதாகிறது. கையால் கருவி செய்தால், ஒரு நாளில் ஒன்று மட்டுமே செய்ய முடியும். ஆனால், தற்போது இரண்டு கருவி செய்கிறேன். இதற்காக தினமும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கிறேன். நமது பாரம்பரிய இசை கருவியாக இருந்தாலும், அதை செய்வதற்கு பலரும் முன்வருவதில்லை. ஒரு சிலர் செய்தாலும், நவீன இயந்திரத்தை பயன்படுத்தி செய்கின்றனர்.
கையால் உருவாக்கப்படும் கருவியை வாங்குவதற்கு கேரளாவின் காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணுார், வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தருகின்றனர்.
கருவி தயாரிக்கும் போது பல முறை சுத்தியால் அடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், எனது உள்ளங்கையே காய்த்து போய்விட்டது. ஆனாலும், கலை மீதான ஆர்வத்தால் வலி கூட தெரியவில்லை. இந்த கருவியை அடிக்கும் போது, அதிலிருந்து ஏற்படும் ஒலி இரண்டு கி.மீ., வரை கேட்கும்.
கடலோர பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் புலி வேஷம் கட்டி ஆடுவோருக்கு இந்த இசை, புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இதை செய்வதற்கு அடுத்த தலைமுறையினருக்கும் கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்த கலையை அழிய விடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .