/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பைக் டாக்சி' ஓட்டிய 1.20 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம்... செப்., 22ல் நிர்ணயம்!; வாழ்வாதாரத்தை காப்பாற்றுமா கர்நாடக உயர் நீதிமன்றம்?
/
'பைக் டாக்சி' ஓட்டிய 1.20 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம்... செப்., 22ல் நிர்ணயம்!; வாழ்வாதாரத்தை காப்பாற்றுமா கர்நாடக உயர் நீதிமன்றம்?
'பைக் டாக்சி' ஓட்டிய 1.20 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம்... செப்., 22ல் நிர்ணயம்!; வாழ்வாதாரத்தை காப்பாற்றுமா கர்நாடக உயர் நீதிமன்றம்?
'பைக் டாக்சி' ஓட்டிய 1.20 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம்... செப்., 22ல் நிர்ணயம்!; வாழ்வாதாரத்தை காப்பாற்றுமா கர்நாடக உயர் நீதிமன்றம்?
UPDATED : செப் 15, 2025 08:08 AM
ADDED : செப் 15, 2025 06:02 AM

'சிலிகான் சிட்டி'யான பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், காற்று மாசுபாட்டை தடுக்கவும் பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆனால், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொது போக்குவரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட இடத்திற்கு உரிய நேரத்தில் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆட்டோ, டாக்சி கட்டணமும் அதிகம். இதனால், பைக் டாக்சி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
தடை அதே நேரம், கர்நாடகாவில் பைக் டாக்சி இயங்க துவங்கியது முதல், தங்கள் வருவாய் குறைந்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்தனர். இது தொடர்பாக பல போராட்டங்கள் நடத்திய பின், செவி சாய்த்த மாநில அரசு, பைக் டாக்சிக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, பைக் டாக்சி நிறுவனங்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிமன்றம், அரசின் உத்தரவு சரியே என தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ஜூன் 15ம் தேதி வரை இயங்க, பைக் டாக்சி நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கேட்டிருந்தன. அதேவேளையில், அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முன் மனு தாக்கல் செய்தன.
பைக் டாக்சி நிறுவனங்கள் தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், 'மனுதாரர்கள் தொழில் நடத்த அடிப்படை உரிமை உள்ளது. இதற்கு சட்டமும் அனுமதிக்கிறது. இதை உங்களால் தடுக்க முடியாது.
'பைக் டாக்சி இயக்குவதில் பாதுகாப்பு பிரச்னை இருந்தால், மாநில அரசு, அதை நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விடுத்து பைக் டாக்சி ஓட்ட அனுமதி இல்லை என்று கூற முடியாது. மோட்டார் சைக்கிளை போக்குவரத்து வாகனங்களாகவும், டாக்சிகளாகவும் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறது' என்றனர்.
விதிமுறைகள் இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'பைக் டாக்சி தடை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், அரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
பல மாநிலங்களில் பைக் டக்சிகள் இயங்க அனுமதி உள்ளதால், இதற்கான விதிகளை உருவாக்கி, செப்., 22ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
இதைடுத்து, நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்று தவறாக எண்ணிய பைக் டாக்சி நிறுவனங்கள், மீண்டும் பைக் டாக்சிகளை இயக்கின. இவ்விஷயத்தை, நீதிமன்றத்தின் கவனத்துக்கு அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி கொண்டு சென்றார். அப்போது நீதிபதிகள், 'பைக் டாக்சி இயங்கலாம் என்று நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்றனர். இதையடுத்து, பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டது.
மாநில அரசும், பைக் டாக்சி தொடர்பான சாதக, பாதகங்களை ஆலோசித்து விதிகளை உருவாக்க கமிட்டி அமைத்து.
இதன்படி, போக்குவரத்து துறை செயலர் தலைமையில் அமைந்த இந்த கமிட்டியில், பெங்களூரு நகர சாலை போக்குவரத்து மேம்பாட்டு கமிஷனர்; தொழிலாளர் நலத்துறை கமிஷனர்; போக்குவரத்து, சாலை பாதுகாப்பு கமிஷனர்; பி.எம்.டி.சி., நிர்வாக மேலாளர்; பெங்களூரு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர்; பெங்களூரு நகர போலீஸ் இணை கமிஷனர்; பி.எம்.ஆர்.சி.எல்., மூத்த பிரதிநிதி; கிரேட்டர் பெங்களூரு ஆணைய மூத்த பிரதிநிதி; மாநில மாசு கட்டுப்பாட்டு ஆணைய மூத்த அதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்கமிட்டியினர், பைக் டாக்சியால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பர். வரும் 22ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதன்பின், தன் நிலைப்பாட்டை நீதிமன்றம் அறிவிக்கும்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக, பைக் டாக்சியை நம்பியிருக்கும், 1.20 லட்சம் இளைஞர்கள் படபடப்புடன் காத்திருக்கின்றனர்.