ADDED : ஆக 10, 2025 08:36 AM
தங்கவயல்: தங்கவயலில் நேற்று மாலை 5:50 மணிக்கு திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நகரம் முழுதும் நான்கு மணி நேரம் இருளில் மூழ்கியது.
தங்கவயலில் மின் இணைப்பு இல்லாததால் இரவு 7:00 மணிக்கு மேல் நகரில் நடமாட்டமே இல்லை. சாலைகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை.
எம்.ஜி.மார்க்கெட்டில் அனைத்துக் கடைகளுமே மூடப்பட்டன. ஹோட்டல்களில் ஜெனரேட்டர் பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர் வராமல் போனதால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
வீடுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தனர். சில வீடுகளில் தீபம் ஏற்றி அந்த வெளிச்சத்தை பயன்படுத்தினர். மின் இணைப்பு இல்லாததால் கிரைண்டர்களில் அரிசி, பருப்பு, தேங்காய் அரைக்க முடியாமல் போனது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வீடுகளில் படிக்கவும், மொபைல் போன்களில் சார்ஜ் செய்யவும் முடியாமல் தவித்தனர். இரவு 9:55 மணிக்கு தான் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதுபற்றி விசாரித்தபோது, தங்கவயலில் மின் இணைப்பு வழங்கும் கேபிள் அறுந்து பழுதடைந்ததாக கூறப்பட்டது. ஒரு மணி நேரத்தில் சீராகும் என்று தெரிவிக்கப்பட்டது; ஆனால், நான்கு மணி நேரத்திற்கு பின் தான் மின்சாரம் வந்தது.

