ADDED : ஏப் 03, 2026 03:05 AM
கர்நாடகாவில் விளையாட்டு மைதானங்களில் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதாக, சி.ஏ.ஜி., அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாநில அரசு விளையாட்டு துறைக்கு ஒதுக்கிய நிதியை, சரியாக செலவு செய்ததா என்பது குறித்து, சி.ஏ.ஜி., என்ற, இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம்:
விளையாட்டு உள்கட்டமைப்புக்கான செலவு பங்கீட்டில் குறைபாடுகள் உள்ளன. 2019 முதல் 2024 வரை, மாநிலத்தில் உள்ள, 31 மாவட்டங்களில், 29 மாவட்டங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும், 6 சதவீதம் கூட செலவு செய்யப்படவில்லை. பீதர், தார்வாட், கலபுரகி, ராம்நகர் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.
விளையாட்டு மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெங்களூரு, மாண்டியா ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே, 39 சதவீதம் வரை செலவு செய்யப்பட்டு உள்ளது. விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பு வசதிகளில் பெரும் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. தாலுகா அளவிலான மைதானங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
வரும், 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம், ஒரு பல்நோக்கு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என, மாநில அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறையிடம் முறையான திட்டமிடல் இல்லை. 89 தாலுகாக்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதனால், உள்ளூர் இளைஞர்கள், விளையாட்டில் தங்கள் எதிர்காலத்தை மேம்படுத்துவது முடியாத காரியமாக இருக்கிறது.
குறிப்பாக, விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானம், மேம்படுத்துதல் உள்ளிட்ட 342.51 கோடி ரூபாய் மதிப்பிலான 233 பணிகளில், 57 பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இந்த, 57 பணிகளின் மதிப்பு 43.84 கோடி ரூபாயாகும். மாநிலத்தில் உள்ள, 29 தாலுகா அளவிலான விளையாட்டு மைதானங்களில் குடிநீர் வசதி இல்லை, துப்புரவு பணிகள் சரியாக நடப்பதில்லை. தார்வாட் விளையாட்டு விடுதியில், வீரர்கள் தங்குவதற்கு முறையான வசதியில்லை. வெறும் நான்கு அறைகளில், 68 வீரர்கள் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -:
