/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.200
/
கர்நாடகாவில் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.200
கர்நாடகாவில் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.200
கர்நாடகாவில் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.200
ADDED : செப் 13, 2025 04:48 AM
பெங்களூரு: கர்நாடகாவில் தியேட்டர், மல்டிபிளக்ஸ்களில் அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் 200 ரூபாயை அதிகபட்ச கட்டணமாக நிர்ணயித்து அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புதிதாக ஏதாவது திரைப்படம் வெளியானால், மக்கள், குடும்பத்துடன், தியேட்டர்கள், மால்களுக்கு வருவர். ஆனால் தற்போது புதிதாக திரைக்கு வரும் திரைப்படங்கள் ஒரு வாரத்திற்குள் ஓ.டி.டி.,யில் வந்து விடுவதால், தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்க, மக்களிடையே ஆர்வம் குறைந்தது.
இதனால் கர்நாடகாவில் பல திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளன. தியேட்டர், மல்டிபிளக்ஸ்களில் சீரான கட்டணம் இல்லாமல் இருப்பதும், பண்டிகை நேரத்தில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவம், மக்கள் படம் பார்க்க வராமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு, பொதுமக்கள், தியேட்டர் உரிமையாளர்கள், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, 'தியேட்டர், மல்டிபிளக்ஸ்களில் அனைத்து மொழி திரைப்படங்களுக்கும், அதிகபட்ச கட்டணமாக 200 ரூபாய் நிர்ணயிக்கப்படும்' என, முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார். டிக்கெட் கட்டணத்தை திருத்த கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 2025ல் திருத்தம் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி, அரசு இதுதொடர்பான உத்தரவு பிறப்பித்தது. யாருக்காவது ஆட்சேபனை இருந்தால், 15 நாட்களில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக எந்த ஆட்சேபனையும் வரவில்லை.
இதையடுத்து, தியேட்டர், மல்டிபிளக்ஸ்களில் அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் 200 ரூபாய்; ஜி.எஸ்.டி.,யாக 36 ரூபாய் என, 236 ரூபாயை அதிகாரப்பூர்வமாக அரசு நேற்று நிர்ணயித்தது.
மல்டிபிளக்ஸ்களில் உள்ள 'கோல்டு கிளாஸ்' இருக்கைக்கு இந்த கட்டணம் பொருந்தாது. அந்த இருக்கைக்கு, தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.