/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலாரின் பழமையான சோமேஸ்வரர் கோவில்
/
கோலாரின் பழமையான சோமேஸ்வரர் கோவில்
ADDED : ஜூன் 23, 2025 11:09 PM

கோலார் மாவட்டத்தின் தலைநகரான கோலார் டவுனில் உள்ளது சோமேஸ்வரர் கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் 11ம் நுாற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது.
பின், விஜயநகர பேரரசர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த கோவில் விஜயநகர பாணி கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கோவிலின் உட்புற துாண்களில் உள்ள சிற்பங்கள், மன்னர்கள் காலத்து வர்த்தகம், அதன் முக்கியத்துவம், மதிப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் வகையில் உள்ளது.
நுழைவாயில் பகுதியில் உள்ள பெரிய கோபுரம் கோவில் கட்டுமானத்தில் சோழர்களின் எண்ணங்களுக்கு சான்றாக உள்ளது. பிரமாண்டமான துாண்களை கொண்ட முகமண்டபம், வசந்த மண்டபம், பார்வதி தேவிக்கான சன்னிதி ஆகியவை பழம் பெருமை வாய்ந்தவை.
கோவிலுக்குள் உள்ள திருமண மண்டபத்தில் உள்ள துாண்களில் புராண கதைகளை எடுத்து கூறும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் யாகசாலை, சேமிப்பு அறையில் சுவர்களில் விஜயநகர பேரரசின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்யாணி என்று அழைக்கப்படும் பெரிய படிக்கட்டு குளம் கோவிலுக்குள் உள்ளது.
சிவனை நேராக பார்த்தபடி அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் காதில் சென்று, நாம் நினைத்ததை கூறினால் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவிலில் அடித்தள பகுதியில் உள்ள லிங்கத்தின் மீது யானைகள் விளையாடுவது, சண்டையிடுவது போன்ற சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன.
கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலுக்கு ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவில் நடை தினமும் காலை 7:00 மணி முதல் காலை 11:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து கோலார் 69 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கோலாருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரில் சென்றாலும் கோவில் முன்பு பார்க்கிங் வசதி உள்ளது
--- -நமது நிருபர் --.