/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளநீர் விலை கிடுகிடு ரூ.70ஐ தாண்டியது
/
இளநீர் விலை கிடுகிடு ரூ.70ஐ தாண்டியது
ADDED : மார் 25, 2025 12:26 AM

பெங்களூரு: வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இளநீர் விற்பனை அதிகரிப்பதால், விலை தொடர்ந்து ஏறுமுகமாகிறது. ஒரு இளநீரின் விலை 70 ரூபாயை தாண்டியுள்ளது.
கோடை கால வெப்பம், மக்களை வறுத்து எடுக்கிறது. பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் பரிதவிக்கின்றனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க இளநீர், குளிர்பானம், லஸ்சி, மோர், பழ ரசங்களை அருந்துகின்றனர்.
குறிப்பாக இளநீரை அதிகம் நாடுகின்றனர். இளநீர் எந்த விதமான ரசாயனமும் இல்லாத அற்புதமான பானம். அத்துடன் மருத்துவ குணங்களும் உள்ளன. வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
எனவே பலரும் இளநீரை நாடுகின்றனர். இதன் விளைவாக விலை கிடுகிடுவென அதிகரிக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு, ஒரு இளநீர் 25 முதல் 40 ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது 70 ரூபாயை தாண்டியுள்ளது.
இளநீரில் நீரின் அளவும் குறைந்துள்ளது. விலை அதிகம் என்பதால், இளநீருக்கு பதிலாக பழரசங்கள் அருந்துகின்றனர். தர்ப்பூசணி சாப்பிடுகின்றனர்.
இதற்கு முன்பு மத்துார், மலவள்ளி, ராம்நகர், மாண்டியா, ஹாசன், துமகூரில் இருந்து பெங்களூருக்கு இளநீர் வந்தது. தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தும் வந்தது. தற்போது வரத்து குறைந்துள்ளது. விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணம்.
தற்போதைக்கு இளநீர் விலை குறைய வாய்ப்பு இல்லை என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.