/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நவீன வடிவில் நடக்கிறது அக்கப்போர்
/
நவீன வடிவில் நடக்கிறது அக்கப்போர்
ADDED : ஆக 20, 2025 07:56 AM

அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருவரும் தங்கள் பலத்தை நிரூபிப்பதிலே மும்மரமாக இருப்பர். இதற்காக, கூட்டம், பேனர், போஸ்டர், மாநாடு நடத்தி, தங்கள் இருப்பை அவ்வப்போது காட்டிக் கொள்வர். பேனர் வைப்பதிலும், போஸ்டர் ஒட்டுவதிலும் நடக்கும் அக்கப்போருக்கு அளவே இல்லை.
போஸ்டர் சாலையோரங்களில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பேனர்களை வைப்பது, தெருக்களின் பெயர் பலகைகள் மீது போஸ்டர் ஒட்டி, தெருவின் பெயரை தெரிய விடாமல், 'அட்ராசிட்டி' செய்வர். போஸ்டரை கிழிப்பது, ஒரு கட்சியின் போஸ்டர் மீது வேறோரு கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது என சொல்லிக் கொண்டே போகலாம். இதற்காக நடக்கும் சண்டைகளின் எண்ணிக்கை, வானில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்று, எண்ணவே முடியாது.
இந்த அட்ராசிட்டிகள், கடந்த காலத்தில் இருந்து நி கழ்காலம் வரை நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், முந்தைய காலத்தில் இருந்த அளவுக்கு போஸ்டர் சண்டைகள் நடப்பதில்லை.
இதற்காக, கட்சிக்காரர்கள் திருந்தி விட்டனரோ என தவறாக நினைக்க வேண்டாம். காலத்திற்கேற்ப அவர்களும் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
கேலி சித்திரம் இந்த, 'இன்டர்நெட்' உலகத்தில், தங்கள் பலத்தை காட்ட, சமூக வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவேற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதுவும் முந்தைய காலத்தில் நடந்த போஸ்டர் சண்டைகளுடன் ஒப்பிடுகையில், சற்றும் சுவாரசியம் குறையாமல் உள்ளது.
இப்படி கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும், 'எக்ஸ்' வலைதளத்தில் சண்டையிடாத நாளே இல்லை எ ன கூறலாம்.
இருவருமே தங்கள் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' பக்கத்தில், கேலி சித்திரம் வெளியிடுவது, மாறி மாறி குறை சொல்வது போன்ற போஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பார்ப்பதற்கு அப்படியே எதிர்க்கட்சி தலைவர், முதல்வர், துணை முதல்வர் போன்ற படங்களை கேலி சித்திரங்களாக்கி பதிவிடுகின்றனர்.
இவர்கள் வரம்பை மீறி விமர்சிக்காமல் இருந்தாலும், இவர்கள் போடும் போஸ்ட்களுக்கு கருத்து சொல்வதாக கூறி, இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் வார்த்தை மோதல்களில் ஈடுபடுகின்றனர். இதில், சில கருத்துகள் படிக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன.
இந்த மோதலில், சிலரை வீடு தேடி சென்று தாக்குதல் நடந்த முயன்ற சம்பங்களும் அரங்கேறி உள்ளன.
எது பெருசு கர்நாடக காங்கிரசின் எக்ஸ் பக்கத்தை பின் தொடர்வோர் எண்ணிக்கை 3.91 லட்சம்; கர்நாடக பா.ஜ.,வின் 'எக்ஸ்' பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5.43 லட்சம். கடந்த 24 மணி நேரத்தில் பா.ஜ., தன் பக்கத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை விமர்சித்து நான்கு புகைப்படங்களை வெளியிட்டது.
இதில், 'பிரிடடிஷ் உளவாளியின் முகமூடி அவிழ்க்கப்படும், தேர்தல் ஆணையத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்கள் தராமல் ஓடுகிறார், நாட்டில் உள்ள 140 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தோல்வி அடைந்த ராகுல்' என கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம், குண்டும் குழியுமான சாலையில் பைக்கில் செல்லும் சிவகுமார், தங்க செயின் அணிந்த பரமேஸ்வர், மது பங்காரப்பா, சித்தராமையா போன்றோரும் விமர்சிக்கப்பட்டு உள்ளனர்.
அதே போல காங்கிரஸ் தன் பக்கத்தில் அரசின் சாதனைகளையும், தேர்தல் ஆணையத்தை குறை சொல்லி, பிரதமர் மோடியை கேலி செய்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
ஆக... காலத்திற்கேற்ப தங்கள் சண்டை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என தலைவர்களும், தொண்டர்களும் கோரசாக கூவுவதை நம்மால் இன்றும் பார்க்கவும், கேட்கவும் முடிகிறது.
- நமது நிருபர் -