திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை
திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை
UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 07:40 PM

கே.பி.அக்ரஹாரா: ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கல்லுாரி நண்பரிடம் விசாரணை நடக்கிறது.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா கடப்பாசுவாமி மடம் அருகே உள்ள வீட்டில் வசித்தவர் பூமிகா, 24. இவர், தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிரண், 26, என்பவரை காதலித்தார். காதலுக்கு இரு குடும்பத்தினருடன் சம்மதம் தெரிவித்தனர்.
ஜனவரியில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில், பூமிகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பூமிகாவின் கழுத்தில் மஞ்சள் கயிறும் இருந்தது.
இதனால் அவருக்கு முன்கூட்டியே வேறு யாருடனாவது திருமணம் நடந்ததா; அதை வீட்டில் சொல்லாமல் மறைத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பூமிகாவின் மொபைல் போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்த போது, அவர் தன் கல்லுாரி நண்பரான கவுதம், 24, என்பவரிடம் அடிக்கடி போனிலும், வீடியோ அழைப்பிலும் பேசியுள்ளார்.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன் கடைசியாக கவுதமிடம் பேசியதும், நான்கு மாதங்களுக்கு முன், கல்லுாரி நண்பர்களுடன் பூமிகா சுற்றுலா சென்றதும் தெரிந்தது.
கவுதம் மீது போலீசாருக்கு சந்தேகம், ஏற்பட்டதால் அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து உள்ளனர்.
