/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் 20 லட்சம் பேர்! வெறும் 485 பேர் மட்டுமே உள்ளதாக போலீஸ் துறை தகவல்
/
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் 20 லட்சம் பேர்! வெறும் 485 பேர் மட்டுமே உள்ளதாக போலீஸ் துறை தகவல்
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் 20 லட்சம் பேர்! வெறும் 485 பேர் மட்டுமே உள்ளதாக போலீஸ் துறை தகவல்
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் 20 லட்சம் பேர்! வெறும் 485 பேர் மட்டுமே உள்ளதாக போலீஸ் துறை தகவல்
ADDED : டிச 21, 2025 05:23 AM

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 485 என, போலீஸ் துறை கூறுகிறது. ஆனால், 20 லட்சம் பேர் வசிப்பதாக சில உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். சரியாக ஆய்வு நடத்தப்படவில்லை என்றும், அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கல்வி, தொழில், சுற்றுலா என, பல்வேறு காரணங்களை காட்டி, கர்நாடகாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள், விசா காலம் முடிந்தாலும், சொந்த நாட்டுக்கு திரும்பாமல், சட்டவிரோதமாக இங்கேயே தங்குகின்றனர்.
கூலி வேலை பெங்களூரிலேயே அதிகமானோர் வசிக்கின்றனர். புறநகர் பகுதிகளில் வசிக்கும் இவர்கள் கூலி வேலை, செக்யூரிட்டி, குப்பை மறுசுழற்சி மையங்களில் குப்பையை தரம் பிரிப்பது என, பல்வேறு பணிகளை செய்து பிழைப்பு நடத்துகின்றனர்.
குறிப்பாக, வங்க தேசம், இலங்கை, கென்யா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பெங்களூரில் வசிக்கின்றனர்.
இவர்கள் அசாம், மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு பெற்றுள்ளனர். இவர்கள் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வங்கியாகவும் திகழ்கின்றனர்.
கடந்த, 2023ல் சட்டசபை தேர்தலின் போது, சட்டவிரோதமாக இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூரிலேயே லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வசிக்கின்றனர். ஆனால், உள்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வெறும், 485 வசிக்கின்றனர்.
'கர்நாடகாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள, 485 வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 308 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். 177 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். சிலர் வெளிநாட்டவர் கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாட்டவருக்கு போலியான ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது' என, உள்துறை தெரிவித்து உள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் சரியல்ல என, பெயரை வெளியிட விரும்பாத உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். சரியாக ஆய்வு நடத்தப்படவில்லை என்றும், அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
கர்நாடகாவில், 15 முதல் 20 லட்சம் வெளிநாட்டவர்கள், சட்டவிரோதமாக வசிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து, நாட்டு எல்லையை கடந்து நமது நாட்டுக்கு வந்து வசிக்கின்றனர்.
சைபர் கிரைம் போலியான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உட்பட, பல்வேறு போலியான ஆவணங்களை தயாரித்து வைத்துக்கொண்டு, அரசின் சலுகைகளை பெறுகின்றனர்.
சுற்றுலா, கல்வி, தொழில் என, பல காரணங்களுக்காக கர்நாடகாவுக்கு வந்துள்ள பலர், விசா முடிந்தும் சொந்த நாடுகளுக்கு செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளனர். பெங்களூரின் ஹென்னுார், நாகவாரா, ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக்சிட்டி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் போதைப்பொருட்கள், விபச்சாரம், சைபர் கிரைம் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே மையம் கர்நாடகாவில் விசா முடிந்தும், சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டு நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மத்திய வெளியுறவு துறை மூலமாக, அந்தந்த நாட்டுக்கு தகவல் தருகிறோம். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
வழக்கு முடியும் வரை, வெளிநாட்டவர் கட்டுப்பாட்டு மையத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். இதற்காகவே நெலமங்களா அருகில் சொன்டேகொப்பாவில், வெளிநாட்டவரை தங்க வைக்க மையம் கட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டு நபர்களை தங்க வைக்க, கர்நாடகாவிலேயே இந்த ஒரே மையம் தான் உள்ளது. இங்கு, 40 பேரை மட்டுமே தங்க வைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

