ADDED : மே 09, 2026 11:55 PM

கர்நாடகாவின் அடையாளமாக யக்ஷ கானா நாடக கலை திகழ்கிறது. இது, கடலோர மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. நடனம், இசை, வசனம் அனைத்தும் சங்கமிக்கும் கலை இது. இது, ராமாயணம், மஹாபாரதம் கதைகளை மையமாக கொண்டு இரவு முழுதும் நாடகம் நடக்கும்.
'டொள்ளு குனிதா' இது ஒரு துடிப்பான நாட்டுப்புற நடனம். பெரிய மேளங்களை முழங்கியபடி, கலைஞர்கள் ஆக்ரோஷமாக ஆடுவர். இந்த நடனம் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் நடக்கும். இதை பார்க்கும் போது உடல் புல்லரிக்கும். நடனக் கலைஞர்களின் கால் அசைவுகளை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கலாம்.
கலைஞர்கள் தங்கள் உடலில் மஞ்சள், கருப்பு நிற பெயின்டை பூசிக்கொண்டு புலி போல வேஷமிட்டு ஆடுவர். இது புலி ஆட்டம் என அழைக்கப்படுகிறது.
இன்றைக்கும் அரசு நிகழ்ச்சிகளில் புலி ஆட்டம் இடம் பெறுகிறது. மேலும், வசதி படைத்தவர்களின் இல்ல விழாக்களில் புலி ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது. சிவபெருமானின் வீரத்தை பறைசாற்றும் வகையில், கையில் வாள் ஏந்தி, ஆவேசமாக ஆடப்படுவது, 'வீரகசே' நடனம். இது, தசரா பண்டிகையின் போது நடக்கும் ஊர்வலங்களில் இடம்பெறும். தசராவில் வீரகசே நடனம், கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது மரபு. இவை வெறும் நடனம், நாடகம் மட்டும் கிடையாது. மாறாக, இது இந்த மண்ணின் உணர்வு, பெருமை!
- நமது நிருபர் -
