/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுடுகாட்டிலும் திருட்டு மர்ம நபர்கள் அட்டகாசம்
/
சுடுகாட்டிலும் திருட்டு மர்ம நபர்கள் அட்டகாசம்
ADDED : ஆக 12, 2025 11:23 PM
தட்சிண கன்னடா: சுடுகாட்டில் இருக்கும் பொருட்களை கூட, திருடர்கள் விட்டு வைக்கவில்லை. தட்சிண கன்னடாவில் சுடுகாட்டில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டில் இருக்கும் போது, அவர்களை தாக்கி, கட்டிப்போட்டு கொள்ளை அடித்து செல்வதை கேட்டிருப்போம்.
ஆனால், தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வாலின் அம்டடி கிராமத்தில், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாட்டில் இருக்கும் பொருட்களை, திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.
இக்கிராமத்தை சேர்ந்த அய்தப்பா பூஜாரி என்பவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அவரின் உடலுக்கு, இக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யப்பட்டது.
சுடுகாட்டில் காவலில் இருக்கும் நபர், நேற்று காலை சுடுகாட்டில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு பித்தளை தண்ணீர் குழாய், ஒரு இரும்பு ஏணி, இரும்பு கேட் உட்பட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அம்டடி கிராம பஞ்சாயத்து தலைவர் விஜயிடம் விஷயத்தை கூறினார். அவரும், பன்ட்வால் சிட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைவர் விஜய் கூறுகையில், ''இக்கிராமத்தில், சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. வீட்டின் முன் வாகனங்களை நிறுத்தும் போது, எச்சரிக்கையாக இருக்கும்படி கிராமத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.