UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 07:04 PM

– நமது நிருபர் –: ஓய்வு பெற்ற பிறகும், தாவணகெரேயை சேர்ந்த 87 வயது டாக்டர், 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து, சிகிச்சை அளித்து வருகிறார்.
கடந்த 1969ல் மருத்துவ சேவையை துவக்கிய டாக்டர் சித்தலிங்கப்பா முருகப்பா, 87 வயதிலும் மருத்துவ சேவையாற்றி வருகிறார். அவர் முதலில் தாவணகெரேவுக்கு விரிவுரையாளராக வந்தார். பின் உதவி பேராசிரியர், பேராசிரியர், துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்கு பின், தன் வீட்டில் அருகில் சிறிய மருத்துவமனையை நடத்தி, ஏழைகளுக்கு சேவை செய்கிறார்.
இவருக்கு பணத்தின் மீது விருப்பமே இல்லை. நோயாளிகள் கொடுக்கும் 10 அல்லது 20 ரூபாயை ஏற்றுக் கொள்கிறார். தங்களிடம் பணம் இல்லை என்று கூறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
பெங்களூரு, சித்ரதுர்கா, ராணிபென்னுார், ஹாவேரி, ஹரிஹர், ஹரப்பனஹள்ளி போன்ற தொலைதுார இடங்களில் இருந்தும் இவரிடம் சிகிச்சை பெற நோயாளிகள் வருகின்றனர்.
பொது மருத்துவம் படித்தவர் என்பதால், இதயம், கண், நுரையீரல், காய்ச்சல் உட்பட அனைத்து விதமான நோய் உள்ள நோயாளிகளும் இங்கு வருகின்றனர்.
நோயாளிகளுக்கு தீவிர பிரச்னை இருந்தால், உடனடியாக வேறு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து அனுப்பி விடுகிறார்.
ஏழைகளும், பணக்காரர்களும் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் முருகப்பா கூறியதாவது:
ஏழைகள், நடுத்த வர்க்கத்தினர், தேவை உள்ளவர்களுக்கும் என் உடலில் பலம் இருக்கும் வரை சேவை செய்வேன். பணத்தை விரும்பும் எண்ணம் எனக்கு இல்லை. தங்களிடம் பணம் இல்லை என்று நினைக்கும் ஏராளமான ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன். சிலர் பணம் கொடுத்தாலும், அதை திருப்பி கொடுத்து விடுவேன். பணக்காரர்கள் வந்தால், அவர்களிடம் 10 முதல், 20 ரூபாய் வரை பெற்றுக் கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரிடம் கடந்த, 50 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வரும் சாக்கம்மா கூறுகையில், ‘‘கடந்த, 50 ஆண்டுகளாக டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். அவர், பணம் வாங்கி சிகிச்சை அளித்தில்லை. மாத்திரைகளை அவரே கொடுப்பார்.
தாவணகெரே முழுதும் இவரை போன்று சிகிச்சை அளிப்பவர்கள் யாரும் இல்லை. இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும்,’’ என்றார்.
