சாக்கடையில் மிதந்த 'ரூபாய் நோட்டு'கள் போட்டி போட்டு எடுத்தவர்கள் ஏமாற்றம்
சாக்கடையில் மிதந்த 'ரூபாய் நோட்டு'கள் போட்டி போட்டு எடுத்தவர்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 19, 2026 11:15 PM
பெங்களூரு: சாக்கடையில் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால், கழிவு நீரை பற்றி கவலைப்படாமல் பலரும், உள்ளே இறங்கி 'டம்மி' ரூபாய் நோட்டுக்களை அள்ளினர்.
பெங் களூரு ரூரல் மாவட்டம், பிடதி அருகில் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையின், அபனகுப்பே என்ற இடத்தில், சாக்கடையில், 500 ரூபாய் நோட்டுகள் மிதந்தன. கொள்ளையர் சிலர், பணத்தை சாக்கடையில் கொட்டி சென்றதாக, நேற்று காலை தகவல் பரவியது.
இதனால், அப்பகுதியினர் சாக்கடையில் பார்த்த போது, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மிதப்பது தெரிந்தது. பணத்தாசையால், கழிவு நீர் என்று கூட பாராமல், அவர்கள் உள்ளே இறங்கி, கைக்கு கிடைத்த பணத்தை அள்ளி, வெளியே கொண்டு வந்தனர்.
அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களும், மக்கள் கூட்டமாக எதையோ தேடுவதை கண்டு விசாரித்த போது, பணம் மிதப்பது தெரிந்தது.
அவர்களும் வாகனத்தை நிறுத்தி, சாக்கடையில் இறங்கி, கையில் கிடைத்த ரூபாய் நோட்டுகளை அள்ளினர்.
ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது, அவை உண்மையான நோட்டுகளும் அல்ல; கள்ள நோட்டுகளும் அல்ல. விளையாடுவதற்காக பயன்படுத்தும் டம்மி நோட்டுகள் என்பது தெரிந்தது. இதனால், ஏமாற்றம் அடைந்த பலரும் தர்ம சங்கடத்தில் நெளிந்தனர். அனைவரும் கஷ்டப்பட்டு எடுத்த அந்த ரூபாய் நோட்டுகள் மீது, 'பார் புராஜெக்ட் ஸ்கூல் யூஸ் ஒன்லி' என, சிவப்பு மையால், பள்ளி பயன்பாட்டுக்கு மட்டும் என அச்சிடப்பட்டிருந்தது.
இந்த நோட்டுகளை பயன்படுத்தியது யார், எதற்காக கட்டு, கட்டாக கொண்டு வந்து, சாக்கடையில் வீசினர் என தெரியவில்லை. சாக்கடையில் ரூபாய் நோட்டுகள் மிதக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது.
