/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குமாரசாமிக்கு எதிராக செயல்படுவோர் வெற்றி பெற மாட்டார்கள்: தேவகவுடா
/
குமாரசாமிக்கு எதிராக செயல்படுவோர் வெற்றி பெற மாட்டார்கள்: தேவகவுடா
குமாரசாமிக்கு எதிராக செயல்படுவோர் வெற்றி பெற மாட்டார்கள்: தேவகவுடா
குமாரசாமிக்கு எதிராக செயல்படுவோர் வெற்றி பெற மாட்டார்கள்: தேவகவுடா
ADDED : ஜூன் 15, 2025 11:27 PM

பெங்களூரு: ''மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு எதிராக, சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதில், அவர்களால் வெற்றி பெற முடியாது,'' என ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்தார்.
பெங்களூரு ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று மாநில அளவில் சுற்றுப்பயணம் மற்றும், 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் ஆகியோர் செடிக்கு தண்ணீர் ஊற்றி துவக்கி வைத்தனர்.
குற்றச்சாட்டு
பின், தேவகவுடா பேசியதாவது:
சிலர் குமாரசாமிக்கு எதிராக ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அவர்களால் எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
குமாரசாமியின் ஆளுமை, புகழை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது போன்று, நாட்டில் யாரும் கடன்களை தள்ளுபடி செய்ததில்லை.
எனக்கு பின்னால் ம.ஜ.த., நிலைக்காது என்று சிலர் பேசுகின்றனர். தோல்வி தான் வெற்றியின் அடித்தளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தோல்வியால் சோர்வடைய கூடாது. பல ஆண்டுகளுக்கு பின், என் காலில் பிரச்னை ஏற்பட்டதால் நடக்க முடியவில்லை. ஆனால் என் மனதுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
யார் என்னிடம் வந்தாலும், அவர்களை வெறுப்புடன் பார்த்ததில்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து என்னை அழைக்கலாம்.
சென்னபட்டணா இடைத்தேர்தலில் 32 இடங்களில் கூட்டம் நடத்தி உள்ளேன். எதற்காக மக்கள் எங்களை தோற்கடித்தனர் என்பதை நான் சொல்லமாட்டேன். நாங்கள் மீண்டு வருவோம். அதற்கான பலம் எங்கள் கட்சியில் உள்ளது.
மொரார்ஜி தேசாய் எனக்கு கட்சியை கொடுத்தார். ஜனதா தளம் எத்தனை பிளவுகள் கொண்டிருந்தாலும், இக்கட்சி இன்னும் அப்படியே உள்ளது. நான் இல்லை என்றாலும், கட்சி இருக்கும்.
ம.ஜ.த., குடும்ப கட்சி என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். இது குடும்ப கட்சி அல்ல. இது தொழிலாளர்களின் கட்சி. இங்கு பல பெரிய மனிதர்கள், அதிகாரத்தை அனுபவித்து உள்ளனர்.
இன்னும் அனுபவித்து வருகின்றனர். அனைத்து அதிகாரத்தையும் அனுபவித்து விட்டு, கட்சியை விட்டு வெளியேறி விட்டனர்.
இரண்டு தேசிய கட்சிகளுக்கு மத்தியில், ம.ஜ.த., இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
பா.ஜ., காங்கிரசை தவிர, மற்ற அனைத்து கட்சிகளும், மாநில கட்சிகள். பல மாநிலங்களில், மாநில கட்சிகள் ஆட்சி செய்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, உலக தலைவராக வளர்ந்து உள்ளார். அவரை எதிர்த்து நிற்க கூடிய தலைவர் நாட்டில் இல்லை. இதற்காகவே, நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து உள்ளோம்.
ஒத்துழைப்பு
நாங்கள் பிரதமருடன் கைகோர்த்து உள்ளோம். அவுர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். குமாரசாமிக்கு இது வேண்டும், அதுவேண்டும் என்று கேட்கவில்லை.
மோடியே, குமாரசாமியை கேபினட் அமைச்சராக்கி உள்ளார்.
நிகில் குமாரசாமி சிறப்பாக செயல்படுகிறார். அவரின் சுற்றுப்பயண அட்டவணையை பார்த்தேன். நன்றாக தயாரித்து உள்ளார். அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி தேர்தல்களில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களிலும் வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் ஆகியோர் செடிக்கு தண்ணீர் ஊற்றி துவக்கி வைத்தனர்.