/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லோக் ஆயுக்தா நீதிபதிகள் பெயரில் அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்
/
லோக் ஆயுக்தா நீதிபதிகள் பெயரில் அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்
லோக் ஆயுக்தா நீதிபதிகள் பெயரில் அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்
லோக் ஆயுக்தா நீதிபதிகள் பெயரில் அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்
ADDED : அக் 28, 2025 04:22 AM

பெங்களூரு: லோக் ஆயுக்தா நீதிபதிகளின் பெயரில், அரசு அதிகாரிகளை சைபர் குற்றவாளிகள் மிரட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீப நாட்களாக, பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பிரபலங்களின் பெயரில் மோசடி செய்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன், நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல் போன்களை, 'ஹேக்' செய்து 1.50 லட்சம் ரூபாயை பரிமாற்றம் செய்து கொண்டனர். இதையறிந்த தம்பதி, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள சில அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிபதிகள் பெயரில் அழைப்பு வந்துள்ளது.
தங்களை லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி பி.எஸ்.பாட்டீல், உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா என, அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.
அதன்பின், 'உங்கள் துறையில் அதிகமான ஊழல் நடக்கிறது. நாங்கள் சோதனை நடத்தவுள்ளோம். நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்துள்ளது' என கூறியுள்ளனர்.
துறைகளில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்பது குறித்து, தகவல் பெறுகின்றனர். இந்த தகவலை வைத்தே, அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, அரசு துறை ஒன்றின் செயல் நிர்வாக பொறியாளர் வெங்கடேஷ் என்பவருக்கும், மர்ம நபர்கள் போன் செய்தனர். முதலில் அவர் எடுக்கவில்லை.
தொடர்ந்து அழைப்பு வந்ததால் எடுத்து பேசியபோது, 'லோக் ஆயுக்தா நீதிபதிகள்' என கூறி மிரட்டினர்.
வெங்கடேஷுக்கு சந்தேகம் வந்தது. தனக்கு மிரட்டல் வந்த மொபைல் போன் எண்கள், நீதிபதிகளுடையதா என, அவர்களின் அலுவலகங்களுக்கு சென்று விசாரித்தார்.
அப்போது, எண்கள் அவர்களுடையது அல்ல என்பது தெரிந்தது. அவர்களின் பெயர் தவறாக பயன்படுத்தப்படுவது தெரிந்தது.
நீதிபதிகளின் பெயரை தவறாக பயன்படுத்தி, அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக, நீதிபதிகளின் சார்பில், லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தொட்டமனி, விதான்சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.

