/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலியை விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது
/
புலியை விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது
ADDED : ஜூன் 28, 2025 11:07 PM
சாம்ராஜ் நகர்: பாசமாக வளர்த்த பசுவை வேட்டையாடிய புலியை பழிவாங்க, பசு மீது விஷத்தை தடவியவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சாம்ராஜ் நகர் மலை மஹாதேஸ்வரா வன விலங்கு சரணாலயத்தில், ஐந்து நாட்களுக்கு முன்பு, நான்கு குட்டிகளுடன், ஒரு தாய் புலி இறந்து கிடந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே குழு அமைத்தார்.
புலிகள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில், பசு ஒன்றும் இறந்து கிடந்தது. இந்த பசுவின் மீது பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டிருந்தது. புலிகள், பசுவின் உறுப்புகள், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், விசாரணை நடத்திய சிறப்பு குழுவினர், ஹனுாரின் கொப்பா கிராமத்தை சேர்ந்த நாகராஜ், கள்ளேபெட்டதொட்டி கிராமத்தை சேர்ந்த மதுராஜு, கோணப்பா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுராஜு கூறியது:
பாசமாக வளர்த்த என் பசுவை, புலி கொன்றது. இதனால் மிகவும் வேதனையாக இருந்தது. இதுகுறித்து என் நண்பர் நாகராஜிடம் தெரிவித்து புலம்பினேன்.
தங்கள் கிராமத்தை சேர்ந்த கோணப்பா என்பவரின் பசுவையும் புலி தாக்கிக் கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, புலியை கொல்ல திட்டமிட்டோம்.
கையில் பூச்சிகொல்லி மருந்துடன், என் பசுவை கொன்ற இடத்துக்கு சென்றோம். மீண்டும் புலி சாப்பிட வரும் என்பதை உணர்ந்து, அங்கு இறந்து கிடந்த பசுவின் மீது, மருந்தை தெளித்தோம். அதன்படியே புலிகள் வந்து, பசுவை சாப்பிட்டு உயிரிழந்தன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓய்வு பெற்ற வன அதிகாரி பூவய்யா கூறுகையில், ''புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது உறுதியானால், குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
''ஒரே நேரத்தில் ஐந்து புலிகள் இறந்தது மிகப்பெரிய இழப்பாகும். புலிகளை பாதுகாக்கும் விஷயத்தில், வனத்துறையினருடன், பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.