காய்கறி வியாபாரி போல நடித்து கொள்ளை அடித்த மூவர் கைது
காய்கறி வியாபாரி போல நடித்து கொள்ளை அடித்த மூவர் கைது
ADDED : மே 13, 2026 12:07 AM
பெலகாவி: காய்கறிகள் வியாபாரிகளை போல நடித்து, வீடுகளில் திருடிய வெளி மாநிலங்களின் மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
பெலகாவி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெலகாவி மாவட்டத்தின் ஏ.பி.எம்.சி., மற்றும் ஷஹாபுராவின் பல்வேறு இடங்களில், பூட்டிய வீடுகளில் திருட்டு அதிகரித்தது. இது குறித்து, தொடர்ந்து புகார்கள் வந்ததால், திருடர்களை கண்டுபிடிக்க, உயர் அதிகாரிகள் இரண்டு தனிக்குழுக்கள் அமைத்தனர்.
குழுவினரும் பல கோணங்களில், விசாரணை நடத்தி ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு தொடர்பாக, மஹாராஷ்டிராவை சேர்ந்த தேவேந்திர வாக்மோரே, 35, சச்சின் கவுளி, 32, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 4.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் மீட்கப்பட்டன.
ஷஹாபுராவில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, உத்தரபிரதேசத்தின் மின்டு விஸ்வாஸ், 35, என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து, 44.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பறிமுதல் செய்யப்பட்டன.
இம்மூவரும் பெலகாவி மட்டுமின்றி, ஷிவமொக்கா, கலபுரகி, கோவா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உட்பட, பல இடங்களிலும் திருடியுள்ளனர். பகல் நேரத்தில் காய்கறி வியாபாரிகள் போன்று, சுற்றி வந்து பூட்டிய வீடுகளை நோட்டம் விடுவர். இரவு அந்த வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து தங்கநகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடுவர்.
திருட்டு நகைகளை விற்று, கிடைக்கும் பணத்தில் கோவாவுக்கு சென்று காசினோக்களில் உல்லாசமாக பொழுதை கழிப்பதை, வழக்கமாக வைத்திருந்தனர்.
பூட்டிய வீடுகளை குறி வைத்து, திருட்டு நடக்கிறது. பொது மக்கள் யாராக இருந்தாலும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது, நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தகவல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீடுகளை, போலீசாரால் கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
