/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வங்கியில் நடந்த கொள்ளை மேனேஜர் உட்பட மூவர் கைது
/
வங்கியில் நடந்த கொள்ளை மேனேஜர் உட்பட மூவர் கைது
ADDED : ஜூன் 27, 2025 06:59 AM

விஜயபுரா: கனரா வங்கியில் நடந்த கொள்ளை தொடர்பாக, அதே வங்கியின் மேனேஜர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி, நேற்று அளித்த பேட்டி:
விஜயபுரா நகரின், மனகோலியில் உள்ள கனரா வங்கியில், மே 23ம் தேதி கொள்ளை நடந்தது. பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சேப்டி லாக்கரில் இருந்த 53.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 58.97 கிலோ தங்க நகைகள், 5.20 லட்சம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
கர்நாடகாவில் இதுவரை நடந்த வங்கி கொள்ளைகளில், மிகப்பெரிய கொள்ளை இதுதான். இதுகுறித்து, விஜயபுரா போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதே வங்கியின் முந்தைய மேனேஜர் விஜயகுமார் மிரியாலா, 41, தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் நெரல்லா, 28, சுனில் மோகா, 40, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 10.75 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.5 கிலோ தங்க நகைகள், நகைகளை உருக்கி கட்டியாக்கப்பட்ட தங்கம் ஆகியவை மீட்கப்பட்டன. இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மிச்சமுள்ள தங்கத்தையும் விரைவில் கைப்பற்றுவோம்.
இதற்கு முன்பு, மனகோலியில் உள்ள கனரா வங்கியில் மேனேஜராக பணியாற்றிய விஜயகுமார் மிரியாலா, தற்போது ஹூப்பள்ளியின் கதக் சாலையில், கோடாரி நகரில் உள்ள கனரா வங்கியில் பணியாற்றினார். கொள்ளைக்கு, 'மாஸ்டர் மைண்ட்' இவர்தான்.
வங்கி கொள்ளைக்கு மூன்று மாதங்களாக திட்டம் தீட்டியுள்ளனர். உலகின் பல இடங்களில் நடந்த வங்கி கொள்ளை பற்றி தெரிந்து கொண்டனர். வங்கி கொள்ளையை மையமாக கொண்ட பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.