/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்று நாட்கள் நடந்த சி.பி.ஏ., மாநாடு நிறைவு
/
மூன்று நாட்கள் நடந்த சி.பி.ஏ., மாநாடு நிறைவு
ADDED : செப் 14, 2025 04:32 AM

பெங்களூரு: பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்த சி.பி.ஏ., மாநாடு நிறைவு பெற்றது. 'சட்டசபையில் அர்த்தமுள்ள விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்' என, மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சி.பி.ஏ., எனும் காமன்வெல்த் பார்லிமென்ட்ரி கூட்டமைப்பின் 11வது மாநாடு, கடந்த 11ம் தேதி பெங்களூரு விதான் சவுதாவில் துவங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநாடு நடந்தது.
இறுதி நாளான நேற்றைய மாநாட்டில் பேசிய பல மாநிலங்களின் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், 'சட்டசபையில் அர்த்தமுள்ள விஷயங்கள் குறித்து, விவாதம் நடத்த வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தினர்.
சட்டசபை வெளிப்படை தன்மை, பொறுப்பு கூறல், பொதுமக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் நடக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய பெரும்பாலோனார், நமது நாட்டின் வளமான ஜனநாயக வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பொது உரையாடல் குறித்து, தங்கள் கருத்துகளை கூறினர். மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு போதுமான நேரத்தை உறுதி செய்வது, விவாதங்கள் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் வெற்றி பொருளாதார வளர்ச்சியை மட்டுமின்றி, சமூக நீதி, அனைவரின் பங்கையும் சார்ந்தது என்பது மீண்டும் ஒரு முறை வலியுறுத்தப்பட்டது.
மரியாதை, ஒத்துழைப்பு, ஆக்கபூர்வ விவாதம் மூலம் கலாசாரத்தை வளர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற பரஸ்பர உறுதிபாட்டுடன் மாநாடு நிறைவு பெற்றது.
மூன்று நாட்கள் நடந்த மாநாட்டிற்கு, கர்நாடக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தலைமை தாங்கினார்.