/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடும்பத்தில் மூவர் தற்கொலை இளம்பெண் கவலைக்கிடம்
/
குடும்பத்தில் மூவர் தற்கொலை இளம்பெண் கவலைக்கிடம்
ADDED : ஜூலை 10, 2025 03:55 AM
பெலகாவி ;கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் நால்வர் விஷம் குடித்தனர். இதில், மூவர் உயிரிழந்தனர். இளம்பெண் கவலைக்கிடமாக சிகிச்சை பெறுகிறார்.
பெலகாவி நகரின் ஜோதிமஹால் பகுதியில் வசித்தவர் மங்களா குரடேகர், 70. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். மகன் சந்தோஷ் குரடேகர், 44, மகள்கள் சுவர்ணா, 42, சுனந்தா, 30, ஆகியோருடன் வசித்து வந்தார். சந்தோஷ் குரடேகர், தங்க நகை செய்யும் தொழில் செய்து, குடும்பத்தை காப்பாற்றினார்.
சகோதரிகளுக்கு திருமணம் நடக்காததால், சந்தோஷ் குரடேகரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரிடம் தங்கம் வாங்கிய சிலர், மோசடி செய்தனர். குடும்பத்தை நிர்வகிக்க பல இடங்களில் கடன் வாங்கினார். திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.
இவரிடம் தங்க நகை செய்ய, பலரும் 500 கிராம் தங்கம் கொடுத்திருந்தனர். இவற்றை ராஜு என்பவரிடம் கொடுத்து நகைகள் செய்து தரும்படி சந்தோஷ் கூறினார். ஆனால் ராஜு, தங்கத்தை அபகரித்துக் கொண்டார். இதை கேட்டபோது, ராஜுவும், அவரது மனைவியும் மிரட்டினர். அது மட்டுமின்றி சந்தோஷ் 3 கிலோ தங்கத்துடன், ஊரை விட்டு ஓடுவதாக, பொய்யான வதந்தி பரப்பினர்.
இதை நம்பிய மக்கள், சந்தோஷிடம் நகையை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த சந்தோஷும், குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று காலை 9:00 மணியளவில், நால்வரும் விஷம் குடித்தனர்.
இவர்களின் வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, தாயும், மகனும், ஒரு மகளும் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடிய சுனந்தாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.
இதுதொடர்பாக, சஹாபுரா போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தற்கொலைக்கு முன்பு, சந்தோஷ் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. அதில் அவர் அனைத்து விஷயங்களையும் விவரித்துள்ளார். ராஜுவிடம் இருந்து தங்கத்தை மீட்டு, மக்களிடம் சேர்க்கும்படி வேண்டியுள்ளார்.