/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் கைது
/
ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் கைது
ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் கைது
ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் கைது
ADDED : ஜூலை 11, 2025 04:40 AM
பெலகாவி: தங்க நகை வாங்கி ஏமாற்றியதாலும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாலும், ஒரே குடும்பத்தின் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெலகாவி நகரின் ஜோதிமஹால் பகுதியை சேர்ந்தவர் மங்களா குரடேகர், 70. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். மகன் சந்தோஷ் குரடேகர், மகள்கள் சுவர்ணா, சுனந்தாவுடன் வசித்து வந்தார்.
ஜூலை 9ம் தேதி, தாய், மகன், ஒரு மகள் ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர். சுனந்தா, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சஹாபுரா போலீசார் விசாரித்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து நகர போலீஸ் கமிஷனர் பூஷண் குல்பாராவ் போரஸ் நேற்று அளித்த பேட்டி:
சந்தோஷ் குரடேகர், தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணம் கொடுத்தவர்கள், அவரிடம் கேட்டு நெருக்கினர். மனரீதியான சித்ரவதைகளை அனுபவித்தார்.
இச்சூழலில், வீட்டில் உள்ளவர்களிடம் கவலையாக பேசினார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து விஷம் குடித்துள்ளனர்.
சந்தோஷின் சகோதரி சுனந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் சில தடயங்கள் கிடைத்தன.
ராஜேஷ் என்பவரிடம் 500 கிராம் தங்கத்தை சந்தோஷ் கொடுத்திருந்தார். அதை ராஜேஷ் திருப்பிக் கொடுக்கவில்லை. அதுபோன்று, பாஸ்கர், நானா ஷிண்டே ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்.
குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ் வீட்டில் இருந்து 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 661 கிராம் தங்க நகைகளும்; 7.70 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் காவலில் எடுத்து விசாரிப்போம்.
இறந்த சந்தோஷ், தன் மொபைல் போனில், 'கடன் வாங்கிய எவரையும் யாரும் சித்ரவதை செய்யக்கூடாது' என்று டைப் செய்து வைத்திருந்தார்.
கடன் கொடுத்தவர்கள் துன்புறுத்தினால், போலீசில் புகார் செய்யுங்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடன் கொடுக்க அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து பொது மக்கள் கடன் வாங்குங்கள். இல்லை என்றால், அதிக வட்டி வசூலிப்பர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுனந்தா, ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்.
இருந்தாலும், அடிக்கடி வாந்தி வருவதாக கூறியுள்ளார். எனவே, குணமடைந்த பின், அவரிடம் மேலும் விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.