பொய்யான பெயரில் 40 ஆண்டு அரசு பணி உதவியவர்கள் உட்பட 3 பேரிடம் விசாரணை
பொய்யான பெயரில் 40 ஆண்டு அரசு பணி உதவியவர்கள் உட்பட 3 பேரிடம் விசாரணை
ADDED : மே 16, 2026 11:54 PM
பெங்களூரு: போலி ஆவணங்களை தாக்கல் செய்து, 40 ஆண்டுகள் அரசு பணியில் இருந்த நபர், ஓய்வு பெற்ற பின் சிக்கினார். அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
ஷிவமொக்காவின், கர்நாடக மின் வாரிய அலுவலகத்தில், கேங்க் மேன் பணியிடத்துக்கு, 1982ல் நேர்முக தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க ராச்சையா என்பவர் சென்றிருந்தார். பல காரணங்களால் தேர்வு ரத்தானது.
அங்கிருந்து புறப்படும் போது, கவன குறைவால், தன் ஏழாம் வகுப்பு சான்றிதழை தவற விட்டார். இந்த சான்றிதழ், பொம்மேகவுடா என்பவருக்கு கிடைத்தது.
இந்த சான்றிதழை பயன்படுத்திய பொம்மேகவுடா, தானே ராச் சையா என, பொய் சொல்லி கேங்க் மேன் பணியில் அமர்ந்து கொண்டார். பல ஆண்டுகள் ராச்சையாவாக வாழ்ந்த பொம்மேகவுடா, 2003ல் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து, தன் பெயரை பொம்மேகவுடா என, மாற்றிக்கொள்வதாக கூறினார். அதன்பின் தன் சொந்த பெயரில் பணி யாற்றினார்.
இந்நிலையில், 2019ல் உண்மையான ராச்சையாவுக்கு, தான் தவற விட்ட ஏழாம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி, பொம்மேகவுடா அரசு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. கோபமடைந்த அவர் பொம்மே கவுடாவை நேரில் சந்தித்து, 'உன் மோசடி பற்றி போலீசாரிடம் புகார் அளித்து, உன்னை சிறையில் தள்ளுகிறேன்.
உனக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் தடுப்பேன்' என மிரட்டினார். இதனால் பீதியடைந்த பொம்மேகவுடா, ஆண்டு தோறும் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஆசை காட்டி, ராச்சையாவை சமாதானம் செய்தார். அதன்படி பணமும் கொடுத்து வந்தார்.
பெஸ்காமில், மூத்த மெக்கானிக்காக இருந்த பொம்மேகவுடா, 2022 ஜனவரியில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின் கிடைத்த ரொக்கத்தில், 10 லட்சம் ரூபாயை ராச்சையாவுக்கு கொடுத்திருந்தார். பணம் விவகாரத்தில் ஓய்வு பெற்ற பொறியாளர் சுபாஷ் மத்தியஸ்தராக இருந்தார்.
பத்து லட்சம் ரூபாய் பெற்று கொண்ட பின்னரும், மாதந்தோறும் கிடைக்கும் ஓய்வூதியத்தில், பாதியை தனக்கு தர வேண்டும் என, முரண்டு பிடித்தார். இதற்கு பொம்மேகவுடா சம்மதிக்கவில்லை.
எனவே தன் பெயரில், பொம்மேகவுடா அரசு பணியில் அமர்ந்து அரசுக்கு மோசடி செய்ததாக, பெஸ்காம் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பொம்மேகவுடா மோசடி செய்து, அரசு பணியில் இருந்ததையும், இவருக்கு ராச்சையா, சுபாஷ் ஒத்துழைப்பு கொடுத்ததும் விசாரணையில் உறுதியானது.
பெஸ்காம் அதிகாரிகள் அளித்த புகாரின்படி, பெங்களூரின் ராஜாஜிநகர் போலீசார், பொம்மேகவுடா, ராச்சையா, சுபாஷ் ஆகியோர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
