வீட்டின் மீது சுற்றுச்சுவர் விழுந்து 2 சிறுமியர் உட்பட மூவர் பலி
வீட்டின் மீது சுற்றுச்சுவர் விழுந்து 2 சிறுமியர் உட்பட மூவர் பலி
ADDED : ஜூலை 01, 2026 11:28 PM

மங்களூரு: நிலச்சரிவு ஏற்பட்டதில் வீட்டின் மீது சுற்றுச்சுவர் விழுந்ததில், இரண்டு சிறுமியர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. இதில், மங்களூரு கரோடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில், பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி லால்பாபு, 37, என்பவரின் வீட்டின் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில், அவரது வீடு தரைமட்டமானது. மேலும், அருகிலிருந்த மூன்று வீடுகளிலும் அவற்றின் பின்பக்க சுவர்களும் இடிந்து விழுந்தன.
இதில், மொத்தம் எட்டு பேர் சிக்கினர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சேற்றில் புதைந்த நிலையில் இருந்த லால்பாபு, அவரது மனைவி இந்து, 34, மகள்கள் அல்கா, 14, அனுஷ்கா, 11, ஆகியோர் பத்திரமாக மீட்டனர்.
அதே சமயம், அவரது மற்ற மகள்களான அனாமிகா, 7, தனு, 3, ஆகியோர் சேற்றில் சிக்கி மூச்சு விட முடியாமல் உயிரிழந்தனர். இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.
பக்கத்து வீட்டில் குடியிருந்த உடுப்பியை சேர்ந்த பாலகிருஷ்ணா, 40, பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி சாந்தா, 35, உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரண்டு சிறுமியர் உட்பட மூன்று பேர் நிலச்சரிவில் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
