/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கம் கடத்தல்காரர்கள் இருவர் கொலையில் மூவருக்கு 'ஆயுள்'
/
தங்கம் கடத்தல்காரர்கள் இருவர் கொலையில் மூவருக்கு 'ஆயுள்'
தங்கம் கடத்தல்காரர்கள் இருவர் கொலையில் மூவருக்கு 'ஆயுள்'
தங்கம் கடத்தல்காரர்கள் இருவர் கொலையில் மூவருக்கு 'ஆயுள்'
ADDED : ஏப் 21, 2025 05:07 AM
மங்களூரு: தங்கம் கடத்தல்காரர்களை கொலை செய்து உடலை குழிதோண்டி புதைத்த வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம் தலச்சேரியின் நபீர், 24, கோழிக்கோடுவின் பஹீம், 25. இவர்கள் இருவரும் நண்பர்கள். வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்து கேரளா, கர்நாடகாவில் விற்பனை செய்து வந்தனர்.
இந்த தொழிலில் கேரளா காசர்கோட்டின் முஜாஹிர் சனப், 35, முகமது இர்ஷாத், 34, முகமது சப்வான், 34 ஆகியோரும் கூட்டாளிகளாக இருந்தனர். தங்கத்தை மங்களூரில் இருந்து கடத்துவதற்கு வசதியாக, அட்டவார் பகுதியில் ஐந்து பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
ஹலால் முறை
இந்நிலையில் தங்கம் விற்று கிடைத்த பணத்தை, பங்கு பிரிப்பதில் நண்பர்கள், கூட்டாளிகள் இடையில் பிரச்னை இருந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஏற்பட்ட தகராறில், நபீர், பஹீமை, மற்ற மூன்று பேரும் சேர்ந்து, கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
ரத்தத்துடன் உடல்களை வீட்டில் இருந்து வெளியே எடுத்து சென்றால் மாட்டி கொள்வோம் என்று, 'பக்கா பிளான்' செய்தனர். ஹலால் முறையை கையாண்டனர். அதாவது உடலில் ஒரு சொட்டு கூட ரத்தம் இல்லாதபடி வடிய விட்டனர்.
பின், நபீர், பஹீம் உடல்களை சாக்கு மூட்டையில் கட்டி, காரின் டிக்கியில் வைத்து எடுத்து சென்று, காசர்கோட்டில் ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்தனர். வீட்டில் படிந்திருந்த ரத்தத்தை துடைத்த துணிகளை காசர்கோட்டில் ஓடும் சந்திரகிரி ஆற்றில் வீசினர்.
கொலை நடந்து 5 நாட்களுக்கு பின், வாடகை வீட்டில் இருந்த தங்கள் உடைமைகளை மூட்டை, மூட்டையாக கொலையாளிகள் கட்டி கொண்டு இருந்தனர்.
உடல்கள் மீட்பு
இதை கவனித்த அப்பகுதி மக்கள் சந்தேகத்தின்படி, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் மூன்று பேரையும் பிடித்து விசாரித்த போது, இரட்டை கொலை நடந்தது தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த நேரத்தில் மங்களூரு, கண்ணுார், காசர்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதைக்கப்பட்ட இருவரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டன.
கொலை வழக்கை விசாரித்த பாண்டேஸ்வர் போலீசார், மூன்று பேர் மீதும் மங்களூரு முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த 11 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மல்லிகார்ஜூன சாமி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.
கொலையாளிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகி உள்ளது என்று கூறிய நீதிபதி, மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு, மங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

