/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னடத்தில் பேசும்படி கூறிய பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல்
/
கன்னடத்தில் பேசும்படி கூறிய பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல்
கன்னடத்தில் பேசும்படி கூறிய பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல்
கன்னடத்தில் பேசும்படி கூறிய பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல்
ADDED : ஏப் 27, 2025 04:32 AM
கொப்பால்: ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னடத்தில் பேசும்படி கூறிய பயணியை, டிக்கெட் பரிசோதகர் தாக்கி, அடாவடியில் ஈடுபட்டார். இதை கண்டித்து, கொப்பால் ரயில் நிலையம் அருகே கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக, கன்னடர்களை பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகமாகி உள்ளன. பெலகாவியில் கன்னடத்தில் பேசியதற்காக பஸ் நடத்துநர், சிலரால் தாக்கப்பட்டார்.
இதேபோல, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விங் கமாண்டோ ஒருவர், கன்னட வாலிபரை தாக்கினார். இதற்கு பதிலடியாக விங் கமாண்டோ தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த வரிசையில், கடந்த வியாழன் இரவு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கொப்பால் மாவட்டம் பாக்யநகரை சேர்ந்த மஹ்மத் பாஷா அத்தர், கடந்த வியாழக்கிழமை ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில், மைசூரில் இருந்து கொப்பாலுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த ரயில், எலஹங்கா அருகே வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் வந்தார். பயணியரின் டிக்கெட்டை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அவர், அனைத்து பயணியருடனும் ஹிந்தியில் மட்டுமே பேசினார். ஹிந்தி தெரியாத சில பயணியருக்கு அவர் பேசுவது புரியவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த பாஷாவிடம், பரிசோதகர் ஏதோ கூறி உள்ளார்.
வாக்குவாதம்
அவர் பேசுவது புரியாத பாஷா, கன்னடத்தில் பேசுமாறு கூறி உள்ளார். பரிசோதகரோ, “கன்னடத்தில் பேச முடியாது; ஹிந்தியில் தான் பேசுவேன்” என பதிலளித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆக்ரோஷமாக பேசிய பரிசோதகரை, தன் மொபைல் போனில் பாஷா வீடியோவாக பதிவு செய்ய துவங்கினார். இதை பார்த்த பரிசோதகர், அவரது மொபைல் போனை பறித்து வீசினார்.
அத்துடன் பாஷாவின் கன்னத்திலும் அறைந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பாஷா, பரிசோதகரை தாக்க சென்றார். ஆனால், சக பயணியர் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், ரயில் பெட்டியில் பதற்றம் நிலவியது.
கன்னடம் தெரியாது
இதுகுறித்து முதன்மை டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு வீரர்களுடன் வந்த அவர், “டிக்கெட் பரிசோதகருக்கு கன்னடம் தெரியாது; அவரால் நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. அரசு அதிகாரியை பணி செய்ய விடாததால், பாஷா மீது வழக்குப் பதிவு செய்யப்படும்,” என எச்சரித்தார்.
இதை கேட்ட சக பயணியர், பரிசோதகர் மீது தான், தவறு உள்ளதாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின், முதன்மை பரிசோதகர் பிரச்னையை பேசி முடித்தார்.
ஆனால், உண்மையில் பிரச்னை, அத்துடன் முடியவில்லை. அதுவே துவக்க புள்ளியாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் பரவியது. இதையடுத்து ரயிலில் நடந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டம்
இச்சம்பவத்தை கண்டித்து, கொப்பால் ரயில் நிலையம் அருகே, கன்னட ரக் ஷன வேதிகே மாவட்ட தலைவர் பி.கிரிஷானந்த் ஞானசுந்தர் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், மஹ்மத் பாஷாவும் கலந்து கொண்டார்.
கிரிஷானந்த் பேசுகையில், ''பல வட மாநில டிக்கெட் பரிசோதகர்கள், கன்னடர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். தென் மேற்கு ரயில்வேயில் பணிபுரியும் பரிசோதகர்களுக்கு கட்டாயம் கன்னடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
டிக்கெட் நிலையங்களில் கன்னடம் பேசுவோரை நியமிக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட பரிசோதகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இந்த பிரச்னை தொடர்பாக பேசிய தென் மேற்கு ரயில்வே மூத்த தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கன்மாடி, “வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது,” என, உறுதி அளித்தார்.