ADDED : செப் 19, 2026 02:25 AM
குடகு: குடகின் பல்வேறு கிராமங்களில், மீண்டும் புலி நடமாட்டம் காணப்படுகிறது. வளர்ப்பு பிராணிகளை புலி தாக்குவதால், மக்கள் பயத்துடன் நடமாடுகின்றனர்.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், பொரடு கிராமத்தில், சில நாட்களாக புலி நடமாட்டம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, காவேரப்பா என்பவரின் பசுவை புலி தாக்கி, கொன்றது.
இந்த சம்பவம் நடப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் தான், மைதாடி கிராமத்தில் வசிக்கும் பீமய்யாவின் பசு, வயலில் மேயும் போது, அதை, புலி தாக்கி கொன்று தின்றது. இரண்டு கிராமங்களிலும், புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பகல் நேரத்திலேயே புலி நடமாடுவதால், விவசாயிகள் வயலுக்கும், தோட்டத்துக்கும் செல்லவே அஞ்சுகின்றனர்.
புலியை விரைவில் பிடிக்கும்படி, வனத்துறையினரிடம் கோரியுள்ளனர். வனத்துறையினரும் இரண்டு கிராமங்களிலும், புலியை தேடுகின்றனர். அதன் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். ஆங்காங்கே கூண்டும் வைத்துள்ளனர். எனினும், புலி இன்னமும் சிக்கவில்லை.
