/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.எம்.எப்., தலைவர் பதவி காங்கிரசில் கடும் போட்டி
/
கே.எம்.எப்., தலைவர் பதவி காங்கிரசில் கடும் போட்டி
ADDED : ஜூலை 14, 2025 05:42 AM

பெங்களூரு :  கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்காக, காங்கிரசில் முன்னாள் எம்.பி., சுரேஷ், மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, தற்போதைய தலைவர் பீமா நாயக் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
கே.எம்.எப்., தலைவர் பதவி காலம், இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைகிறது. தற்போது கே.எம்.எப்., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பால் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடந்து வருகிறது. இத்தேர்தல்கள் முடிந்த பின், கே.எம்.எப்., தலைவர் தேர்தல் நடக்கும்.
சமீபத்தில், பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் எம்.பி., சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
செல்வாக்கை பயன்படுத்தி, துணை முதல்வர் சிவகுமார், தன் தம்பி சுரேஷை கூட்டுறவு தலைவர் பதவியில் அமர்த்தினார். இப்போது கே.எம்.எப்., தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரது முயற்சி பயனளிப்பது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
இதற்கு கே.எம்.எப்.,பின் இன்னாள் தலைவர் பீமா நாயக், மாலுார் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, முட்டுக்கட்டையாக நிற்கின்றனர்.
கே.எம்.எப்., மற்ற கார்ப்பரேஷன், வாரியங்களை போன்று இல்லை. பணம் கொழிக்கும் கூட்டுறவு சங்கமாகும். பொருளாதார நெருக்கடி இல்லை. இதே காரணத்தால், கே.எம்.எப்., தலைவராக பலரும் போட்டி போடுகின்றனர். இதற்கு முன் ம.ஜ.த.,வின் ரேவண்ணா, பல ஆண்டுகள் கே.எம்.எப்., தலைவராக இருந்துள்ளார். அதன்பின் பா.ஜ.,வின் பாலசந்திர ஜார்கிஹோளியும் தலைவராக இருந்துள்ளார்.
தற்போது காங்கிரசின் பீமா நாயக் இப்பதவியில் இருக்கிறார். அவருக்கு பதவியை விட்டுத்தருவதில் விருப்பம் இல்லை. அமைச்சர் பதவி கிடைக்காததால், மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, தனக்கு கே.எம்.எப்., தலைவர் பதவி வழங்க வேண்டும் என, முரண்டு பிடிக்கிறார். இதற்கிடையே துணை முதல்வர் சிவகுமார், தன் தம்பி சுரேஷை இப்பதவியில் அமர்த்த முயற்சிக்கிறார்.

