மாதம் ரூ.2,000 பெற, கணவரின் 'ஆதார்' எண்... கட்டாயம்! மகளிருக்கு கர்நாடக அரசு புதிய நிபந்தனை
மாதம் ரூ.2,000 பெற, கணவரின் 'ஆதார்' எண்... கட்டாயம்! மகளிருக்கு கர்நாடக அரசு புதிய நிபந்தனை
ADDED : செப் 24, 2026 12:40 AM

பெங்களூரு: மகளிருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, 'கணவரின் ஆதார் எண்ணையும் பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்' என, கர்நாடக மாநில அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது.
கடந்த 2023ல் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி அமைத்தபோது, 'கிரஹலட்சுமி' எனும் மகளிருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை; சக்தி திட்டம் எனும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்.
கிரஹஜோதி எனும் 200 யூனிட் இலவச மின்சாரம், இலவசமாக 10 கிலோ அன்னபாக்யா அரிசி, 'யுவ நிதி' எனும் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்து வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் முறையே 3,000, 1,500 ரூபாய் உதவித்தொகை என, ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தியது.
வீட்டை நிர்வகிக்கும் பெண்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் அரசின் திட்டத்திற்கு, பெண்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. பலர் இந்த தொகையை சேர்த்து வைத்து, பிரிஜ், வாஷிங் மிஷின், சிறிய கடை, தொழில் தொடங்கினர்.
அதேநேரம், இத்திட்டத்தின் கீழ் இறந்த பயனாளிகள் வங்கி கணக்கில் மாதந்தோறும் பணம் வரவு வைக்கப்படுவதும், போலி பயனாளிகள், தகுதியற்ற பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக ஆய்வு செய்த மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், முறைகேடுகளை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த வங்கி கணக்குகளில் பணம் டிபாசிட் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தகுதியற்ற, போலி மற்றும் இறந்த பயனாளிகளை கண்டறிந்து, திட்டத்தை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
குடும்ப தலைவியான பெண்ணின் ஆதார் அட்டை மட்டுமின்றி, கணவரின் ஆதார் எண் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பயனாளிகளை சரி பார்க்க, 17 கேள்விகள் அடங்கிய புதிய கணக்கெடுப்பு படிவம் பயன்படுத்தப்படும். இதில் பயனாளி, குடும்பம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படும்.
பயனாளிகள் மாதந்தோறும் 2,000 ரூபாய் நிதியுதவி பெற, எந்தவிதமான கடன்களும் இல்லாத வங்கி கணக்கை பராமரிக்க வேண்டும்.
அரசு நியமிக்கும் அதிகாரிகள், பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, 'பயோ மெட்ரிக்' அல்லது முக அங்கீகாரம் விபரங்களை சேகரிப்பர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருவதால், இப்பணி முடிந்ததும், வீடு வீடாகச் சென்று கிரஹலட்சுமி பயனாளிகளின் விபரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
