ADDED : மார் 25, 2026 07:12 AM

பெங்களூரு: ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து கர்நாடகாவில் சுங்கச்சாவடி கட்டணம், 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
இதுகுறித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் ஜெயகுமார் கூறியதாவது:
ஏப்ரல், 1ம் தேதி முதல் கர்நாடகாவில் பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் கன்னிமினிகே, சேஷகிரிஹள்ளி; பெங்களூரு - ஹைதராபாத் வழித்தடத்தில் பாகேபள்ளி; பெங்களூரு விமான நிலைய சாலையில் சதஹள்ளி; பெங்களூரு - திருப்பதி வழித்தடத்தில் நங்க்லி; எஸ்.ஆர்.எஸ்., என்ற சாட்டிலைட் டவுன் வட்டச்சாலையின் ஹுலிகுன்டே, நல்லுார் தேவனஹள்ளி உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகளில் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்படும். அதேவேளையில், 10 சுங்கச்சாவடிகளில் மட்டும், செப்., 1ம் தேதி இந்த கட்டணம் அதிகரிக்கப்படும்.
டபிள்யூ.பி.ஐ., எனும் மொத்த விலை குறியீட்டின்படி, சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, 2.5 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தால், அதனை ஐந்து ரூபாயாக உயர்த்துவர். தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் விதிகள் - 2008ன் படி, இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும், கட்டண திருத்தம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான்.
நெடுஞ்சாலை பராமரிப்பு, பழுது பார்ப்பு, மேம்பாட்டு செலவுகளை கருத்தில் கொண்டு கட்டண திருத்தம் செய்யப்படுகிறது. மேலும், பாஸ்டேக் பயணியர், தங்கள் வங்கி கணக்கில் போதுமான அளவு தொகை இல்லை என்றாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்த தவறினாலோ, அவர்களிடம் இரட்டை சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதியை, கண்டிப்பாக பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள், தங்கள் கணக்குகளில் போதுமான நிதியை வைத்திருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு - மைசூரு விரைவுசாலை, 2023ல் திறந்ததில் இருந்து நான்காவது முறையாக தற்போது கட்டணம் உயர்த்தப்படுகிறது. 2023 ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 22 சதவீத கட்டண உயர்வு, பொதுமக்களின் எதிர்ப்பால் திரும்ப பெறப்பட்டது. ஆனால், ஆண்டுதோறும் ஐந்து சதவீத கட்டண உயர்வு தொடர்கிறது.
இந்த வழித்தடத்தில் தினமும் பயணிக்கும் பயணியர் கூறியதாவது:
இந்த விரைவு சாலை, மிகவும் விலை உயர்ந்த சாலைகளில் ஒன்றாகும். என் வேலை விஷயமாக ஒவ்வொரு மாதமும் மைசூரு சென்று வருகிறேன். இவ்வழித்தடத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம், எனக்கு பொருளாதார சுமை ஏற்படுகிறது. இங்கு பெங்களூரில் இருந்து மைசூருக்கு செல்ல மட்டுமே, 180 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணியரையும், இந்த சுங்க கட்டணம் பாதிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
